ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகளை மத்திய தொல்லியல் துறை அதிகாரி ஆய்வு

ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகளை மத்திய தொல்லியல் துறை அதிகாரி ஆய்வு செய்தார்.

Update: 2022-08-22 15:42 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகளை மத்திய தொல்லியல் துறை அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

அகழாய்வு

பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில், அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கவும், அகழாய்வு செய்யப்பட்ட இடத்திலேயே பழங்கால பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் 'சைட் மியூசியம்' அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆதிச்சநல்லூர் பரும்பு, பாண்டியராஜா கோவில் அருகில், கால்வாய் ரோடு ஆகிய பகுதிகளில் நடைபெறும் அகழாய்வில் 80-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், ஏராளமான மண்பாண்ட பொருட்கள், இரும்பாலான ஆயுதங்கள், தங்கத்தாலான காதணி, நெற்றி பட்டயம் போன்ற அணிகலன்கள் கண்டறியப்பட்டன. மேலும் சங்ககால மக்களின் வாழ்விட பகுதிகளும் கண்டறியப்பட்டது.

தொல்லியல் துறை அதிகாரி ஆய்வு

இந்த நிலையில் புதுடெல்லி மத்திய தொல்லியல் துறை அகழாய்வு கள இயக்குனர் லூர்துசுவாமி நேற்று ஆதிச்சநல்லூருக்கு வந்து அகழாய்வு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பொருட்களையும் பார்வையிட்டார்.

அங்கு நடைபெறும் அகழாய்வு பணிகள் குறித்து தொல்லியல் துறை மண்டல இயக்குனர் அருண்ராஜ், ஆய்வாளர் எத்திஸ்குமார் ஆகியோர் விளக்கி கூறினர்.

முன்னதாக சிவகளையில் நடைபெறும் அகழாய்வு பணிகளையும் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு கள இயக்குனர் லூர்துசுவாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அகழாய்வு இயக்குனர் பிரபாகரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்