தாறுமாறாக ஓடிய கார், ஏரிக்குள் பாய்ந்தது

முத்துப்பேட்டையில் மரத்தின் மீது மோதி விட்டு தாறுமாறாக ஓடிய கார், ஏரிக்குள் பாய்ந்தது. இதில் பா.ஜ.க.பிரமுகர் உள்பட 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2022-11-06 18:45 GMT

முத்துப்பேட்டை,:

முத்துப்பேட்டையில் மரத்தின் மீது மோதி விட்டு தாறுமாறாக ஓடிய கார், ஏரிக்குள் பாய்ந்தது. இதில் பா.ஜ.க.பிரமுகர் உள்பட 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஏரிக்குள் பாய்ந்த கார்

திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது48). இவர் பா.ஜ.க. மாவட்ட துணைத்தலைவராக உள்ளார். இவர் நேற்று காலை திருத்துறைப்பூண்டியில் இருந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பட்டுக்கோட்டைக்கு தனது காரில் சென்றுள்ளார். காரை டிரைவர் கணேசன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.

பின்னர் நிகழ்ச்சி முடிந்து திருத்துறைப்பூண்டிக்கு காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது முத்துப்பேட்டை மங்கள்ஏரி அருகே வளைவில் வந்த போது சாலையோரம் இருந்த மரத்தில் கார் மோதி தாறுமாறாக ஓடி மங்கள்ஏரிக்குள் பாய்ந்தது.

2 பேர் உயிர் தப்பினர்

காருக்குள் இருந்த சிவக்குமார் மற்றும் டிரைவர் ஆகியோர் காரின் முன்பக்க கதவு திறக்க முடியாததால் பின்பக்க கதவை உடைத்து கொண்டு வெளியே வந்தனர். இதனால் இருவரும் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் 2 பேரும் முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை போலீசார் பொக்லின் எந்திரம் மூலம் காரை மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்