கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

திண்டிவனம் ரெயில்வே மேம்பாலத்தில் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-10-28 18:45 GMT

திண்டிவனம், 

புதுச்சேரியில் இருந்து கார் ஒன்று பெங்களூரு நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. காரை பெங்களூருவை சேர்ந்த கிருஷ்ணகாந்த்(வயது 44) என்பவர் ஓட்டினார். அந்த கார் நேற்று மதியம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரெயில்வே மேம்பாலத்தில் சென்றபோது, காரின் முன்பகுதி திடீரென தீப்பற்றி எரிந்ததுடன் கரும்புகையும் வெளியேறியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கிருஷ்ணகாந்த் காரை உடனடியாக நிறுத்தியதுடன், தன்னுடன் வந்த பெண்ணுடன் காரில் இருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு கீழே இறங்கி உயிர் தப்பினார். கார் தீப்பற்றி எரிவதை பார்த்த, அந்த வழியாக வந்தவர்கள் இதுபற்றி திண்டிவனம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து காரில் எரிந்த தீயை அணைத்ததோடு, விபத்துக்குள்ளான காரை பொக்லைன் எந்திரம் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதுகுறித்த புகாரின்பேரில் திண்டிவனம் போலீசார் தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.



Tags:    

மேலும் செய்திகள்