மல்லியம்- மயிலாடுதுறை இடையே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்

மல்லியம்- மயிலாடுதுறை இடையே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்

Update: 2023-02-03 18:45 GMT

மல்லியம்-மயிலாடுதுறை இடையே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்

நாகையில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் ராம்குமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். அதன் விவரம் வருமாறு:-

சரபோஜி (இ.கம்யூ):- சங்கமங்கலம் பகுதியில் தெரு விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே போதிய அளவு மின்கம்பங்களை அமைத்து தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். செல்லூர் பகுதிகளில் கால்நடை ஆஸ்பத்திரி அமைத்து தர வேண்டும். திருமருகல் ஒன்றியம் பில்லாலி பகுதிகளுக்கு உட்பட்ட சாலைகள் கரடு முரடாக காட்சியளிக்கிறது. இதனை சீரமைக்க வேண்டும். கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு திறப்பு விழாவின் போது வைக்கப்படும் கல்வெட்டில் மாவட்ட கவுன்சிலர்களின் பெயர்களையும் இடம்பெற செய்து கவுரவிக்க வேண்டும்.

ஆனந்தன் (தி.மு.க.):- மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். இரவு நேரத்தில் அவசர சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு வரும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் பார்க்க டாக்டர்கள் இல்லை. பற்றாக்குறை உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுழற்சி முறையில் டாக்டர்களை பணியமர்த்த வேண்டும். மாவட்ட கவுன்சிலர்களின் பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டே உள்ளது. அதற்குள் எங்களது வார்டு மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும்.

ஆகாய தாமரைகளை அப்புறப்படுத்த வேண்டும்

சுப்பையன் (அ.தி.மு.க.):- வேதாரண்யம் முள்ளியாறு, மானங்கொண்டானாறு, வடிகால் வாய்க்கால்களை ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்துள்ளது. இதனால் பொதுமக்கள் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் பயன்படுத்த முடியவில்லை. கொசு தொல்லை அதிகரிப்பதால் டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே நிதி ஒதுக்கி ஆகாய தாமரைகளை அப்புறப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

கணேசன் (அ.தி.மு.க.):- தெற்கு பொய்கைநல்லூர், வடக்கு பொய்கைநல்லூரில் கடல் சீற்றம் காரணமாக கடற்கரை கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால் அங்கு கருங்கல் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் கோரிக்கையான 22 சதவீத ஈரப்பதம் கொண்ட நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.

மீண்டும் பஸ்சை இயக்க வேண்டும்

குமாரசாமி (தி.மு.க.):- நிலை குழு தலைவர், செயலாளர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது. அரசு அலுவலகங்களுக்கு சென்று ஆய்வு செய்யலாமா? என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும். மல்லியம் - மயிலாடுதுறை இடையே இயக்கப்பட்டு வந்த பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் கடுமையாக சிரமப்பட்டு வருகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

Tags:    

மேலும் செய்திகள்