பஸ் நிலையமாக விளங்கும் தண்டாம்பட்டுபஸ் நிறுத்தம் ஆக்கிரமிப்பு கடைகளின் பிடியில் சிக்கி தவிக்கும் அவலம்

தண்டராம்பட்டில் பஸ் நிறுத்தம் எந்தவிதமான அடிப்படை வசதியில்லாமல் உள்ளதால் கொட்டும் மழையிலும் கொளுத்தும் வெயிலிலும் மாணவ, மாணவிகள், பயணிகள் அவதிப்படும் நிலை தொடர்ந்து வருகிறது.

Update: 2022-10-19 18:45 GMT

தண்டராம்பட்டு

தண்டராம்பட்டில் பஸ் நிறுத்தம் எந்தவிதமான அடிப்படை வசதியில்லாமல் உள்ளதால் கொட்டும் மழையிலும் கொளுத்தும் வெயிலிலும் மாணவ, மாணவிகள், பயணிகள் அவதிப்படும் நிலை தொடர்ந்து வருகிறது.

தாலுகா தலைமையிடம்

தண்டராம்பட்டு தாலுகா 47 ஊராட்சிகளை உள்ளடக்கிய பரந்து விரிந்த தாலுகாவாகும். கடந்த 2006-ம் ஆண்டு தண்டராம்பட்டு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அப்போதைய உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் முயற்சியினால் தி.மு.க. ஆட்சியில் இது தாலுகாவாக உருவானது.

ஆனால் தலைமையிடமாக விளங்கும் தண்டராம்பட்டு ஊராட்சியாகத்தான் உள்ளது. இங்கு பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் வந்தாலும் தனியாக பஸ் நிலையம் என்ற ஒன்று இல்லை.

தானிப்பாடி வழியாக சேலம் செல்லும் சாலை திருவண்ணாமலை செல்லும் சாலை சாத்தனூர் செல்லும் சாலை ஆகிய மூன்று சாலைகளும் இணையும் இடமே தண்டராம்பட்டு பஸ் நிலையமாக உள்ளது.

அங்கு மேற்கூரை வசதி இல்லாததால் கொளுத்தும் வெயிலானாலும் கொட்டும் மழையானாலும் நடுரோட்டில் காத்திருந்துதான் பொதுமக்கள் வெளியூர்களுக்கு பஸ் பிடித்து செல்ல வேண்டும். எங்கும் ஒதுங்குவதற்கு கூட இடமில்லை.

குடிநீர் சுகாதார வளாகம் போன்ற எந்த வசதிகளும் இல்லாமல் இருந்த நிலையில் அமைச்சர் எ.வ.வேலுவின் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து கடந்த 10-2-2010 அன்று கலைஞர் நிழற்கூரை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி மற்றும் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது.

10 ஆண்டுகளாகியும்...

இந்த நிழல் கூரையே இன்று வரை பஸ் நிலையமாக உள்ளது. அதன் பின்பு 10 ஆண்டுகள் ஆகியும் இந்த பஸ் நிறுத்தம் விரிவுபடுத்தப்படாமல் காணப்படுகிறது. திருவண்ணாமலைக்கு செல்லும் பயணிகளுக்கு மட்டுமே இங்குள்ள நிழற்குடை பயன்படுத்துவதாக அமைந்துள்ளது. தானிப்பாடி, சேலம் போன்ற ஊர்களுக்கு செல்லும் பயணிகள் வீதியிலே தான் காத்திருக்க வேண்டி உள்ளது.

இந்த ஊரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் உயர்நிலைப்பள்ளி, ஒரு தனியார் கல்லூரி உள்பட 5 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் செயல்படுகின்றன. தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் பள்ளி வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

ஆனால் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் பலர் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து பள்ளிக்கு வரும்போதும் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போதும் அரசு பஸ்சுக்காக நடுரோட்டில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். மழைக்காலங்களில் ஒதுங்குவதற்கு இடம் இன்றி அருகில் உள்ள வணிக நிறுவனங்களையே நாடி செல்கின்றனர். இதே போல வயதானவர்களும் வீதியிலேயே காத்துக்கிடக்கின்றனர்.

ஆக்கிரமிப்புகள்

இந்த பிரதான சாலையில் போதிய அளவிற்கு சாலை இருப்பினும் சாலையின் பெரும் பகுதி நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள், தள்ளுவண்டி கடைகளால் நிறைந்துள்ளது. இதனால் காலை முதல் 11 மணி வரை இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இந்த நெருக்கடிமிகுந்த பகுதி வழியாகத்தான் அருகில் உள்ள சர்க்கரை ஆலைக்கு செல்ல ஏராளமான கரும்பு லாரிகள் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

தண்டராம்பட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் தூரம் 16 கிலோமீட்டர் மட்டுமே என்பதால் இந்த சிரமங்களை பொறுத்துக் கொண்டு பஸ்சிலோ இரு சக்கர வாகனத்திலோ சென்று வருகின்றனர்.

எனவே மாணவ, மாணவிகள் வயதானவர்கள் நோயாளிகள் ஆகியோரின் நலன் கருதி தண்டராம்பட்டில் பஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீரமைத்து தர வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்