சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது; 2 பேர் உடல் நசுங்கி சாவு

மதுரை அருகே தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 21 பேர் படுகாயங்களுடன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2023-04-28 18:45 GMT

நாகமலைபுதுக்கோட்டை, 

மதுரை அருகே தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 21 பேர் படுகாயங்களுடன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தனியார் பஸ்

மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து, தேனி மாவட்டம் போடிக்கு தனியார் பஸ் ஒன்று நேற்று மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டது. இந்த பஸ்சில் பயணிப்பதற்காக 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சில் அமர்ந்திருந்தனர். பஸ்சை உசிலம்பட்டியை சேர்ந்த பாலமுருகன் (வயது 35) ஓட்டினார். ஆண்டிப்பட்டியை சேர்ந்த பாண்டியன்(40) கண்டக்டராக பணியில் இருந்தார். பஸ்சானது மதுரை அருகே உள்ள நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் சென்றபோது முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மீட்பு பணிகள் தீவிரம்

இதனால், அந்த பஸ்சில் பயணித்தவர்கள் அலறினர். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் விபத்து நடந்த இடத்தில் திரண்டனர். மேலும், போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, பஸ் விபத்துக்குள்ளானதும் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார், அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ஒருவர் பின் ஒருவராக பஸ்சுக்குள் சிக்கியவர்களை மீட்டு, ஆம்புலன்சுகள் மூலம் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும், மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 1 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பஸ்சில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டனர்.

2 பேர் சாவு

இந்த விபத்தில் பேரையூர் டி.ராமநாதபுரத்ைத சேர்ந்த பிச்சை(55), மேலதிருமாணிக்கம் பகுதியை சேர்ந்த குருசாமி(58) ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த பயணிகளில் 21 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு சிலர் மட்டும் பலத்த காயத்துடன் சிகிச்சையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பாக நாகமலைப்புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்