திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் தீப்பிடித்து எரிந்தது

திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் 2 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-12-12 18:40 GMT

திருவண்ணாமலை,

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் தாலுகா பெரியகாயம்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு நேற்று காலை அச்சரப்பாக்கத்தில் திருமணம் நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கையை சேர்ந்த மணமகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 40-க்கும் மேற்பட்டோர் தனியார் பஸ்சில் இரவு ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அந்த பஸ் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வழியாக காஞ்சீபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

தீப்பிடித்து எரிந்தது

இந்த பஸ்சை அரக்கோணத்தைச் சேர்ந்த லோகநாதன் (வயது45) என்பவர் ஓட்டினார். வந்தவாசி- காஞ்சீபுரம் சாலையில், வீரம்பாக்கம் கூட்டுச்சாலை அருகே இரவு 10 மணியளவில் செல்லும்போது திடீரென பஸ்சின் டயர் வெடித்தது. இதில் பஸ் கட்டுப்பாட்டை இழந்து ஓடி சிறுபாலத்தின் மீது மோதியது. அப்போது டீசல் டேங்க் பாலத்தில் உரசியதால் பஸ்சில் திடீரென தீப்பற்றியது.

இதில் தீ மளமளவென பஸ் முழுவதும் பரவியதால், பயணிகள் அலறியடித்து கூச்சலிட்டனர். பஸ்சில் இருந்து இறங்க முண்டியடித்தனர். பஸ் மூடப்பட்ட கண்ணாடிகளை கொண்டதால் பயணிகள் செய்வதறியாது தவித்தனர்.

கண்ணாடியை உடைத்து...

அப்போது சென்னை நோக்கி சென்ற லாரி டிரைவர் இதை பார்த்து லாரியை நிறுத்தினார். உடனடியாக லாரியில் இருந்த இரும்பு கம்பியால் பஸ்சின் கண்ணாடியை உடைத்து பயணிகள் வெளியேற வழி ஏற்படுத்தினார். உடனடியாக பயணிகள் அனைவரும் வேகமாக பஸ்சில் இருந்து இறங்கினர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் இல்லை. இதில் பஸ் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.

இந்த சம்பவத்தில் காஞ்சீபுரம் தாலுகா ஓரிக்கையைச் சேர்ந்த மோகன் (வயது 32), ராமமூர்த்தி (40) ஆகியோர் காயம் அடைந்தனர்.

தகவலறிந்த வந்தவாசி தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்