காளை விடும் விழாவில் பாய்ந்து ஓடிய காளைகள்
செம்பேடு கிராமத்தில் நடந்த காளை விடும் விழாவில் 190 காளைகள் பங்கு பெற்று பாய்ந்து ஓடின.
காளை விடும் விழா
குடியாத்தத்தை அடுத்த செம்பேடு கிராமத்தில் 2-ம் ஆண்டு காளை விடும் விழா நேற்று நடைபெற்றது. இதில் குடியாத்தம், கே.வி.குப்பம், லத்தேரி, காட்பாடி, பேரணாம்பட்டு, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ஆந்திர மாநிலம் சித்தூர், பங்காருபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 190-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.
கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்தனர். தொடர்ந்து போட்டி தொடங்கியது. நிகழ்ச்சியில் குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன், தாசில்தார் விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றபின் காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக பாய்ந்து சென்றன.
10 பேர் காயம்
விழாவை காண குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து காளைகள் ஓடுவதைப் பார்த்து ரசித்து மகிழ்ந்தனர். விழாவில் காளைகள் முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயமடைந்த 3 பேர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
விழாவில் வெற்றி பெற்ற 60 காளைகளுக்கு அதன் உரிமையாளர்களிடம் பரிசுகள் வழங்கப்பட்டது.
குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில், இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊராட்சி பொதுமக்கள், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.
காளை விடும் விழாவை தேசிய பிராணிகள் நல வாரிய உறுப்பினர் மிட்டல் பார்வையிட்டார்.