மூதாட்டியை கழுத்தை நெரித்து கொன்று உடலை கடலில் வீசிய கொடூரம்

மணமேல்குடி அருகே மூதாட்டியை கழுத்தை நெரித்து கொன்று உடலை கடலில் வீசிய கொழுந்தனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-04-06 19:18 GMT

மூதாட்டி மாயம்

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை அடுத்த காரக்கோட்டை கோழிச்சனம் பகுதியை சேர்ந்தவர் சுலோச்சனா (வயது 60). இவரது கணவர் இறந்துவிட்டதால் சுலோச்சனா வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 2-ந்தேதி காலை கடைக்கு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மகள் வித்யா கொடுத்த புகாரின் பேரில் மணமேல்குடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை சீதாராமன்பட்டினம் கடற்கரை பகுதியில் மூதாட்டி உடல் கரை ஒதுங்கியிருப்பதாக வந்த தகவலின் பேரில் மணமேல்குடி இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

கைது

இதில் இறந்து கிடந்தது மாயமான மூதாட்டி சுலோச்சனா என்பது தெரியவந்தது. மேலும் மூதாட்டியின் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கருதி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் மூதாட்டியை கொன்றது அவரது கொழுந்தன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கொலைக்கு உடந்தையாக இருந்த செந்தில் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது:-

கோழிச்சனம் பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் ரமேஷ் (52). இவர் இறந்த சுலோச்சனாவின் கொழுந்தன் முறையாவார். இவர், சுலோச்சனாவின் கணவர் இறந்ததாலும், அவரது மகள் திருமணமாகி வெளியூரில் வசிப்பதாலும் சுலோச்சனாவுக்கு வீட்டு வேலைகள் செய்து கொடுப்பது என உதவியாக இருந்துள்ளார்.

வலைவீச்சு

இந்தநிலையில் இவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல்- வாங்கல் இருந்துள்ளது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், சுலோச்சனாவை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். கடந்த 2-ந்தேதி சோமநாதப்பட்டினம் பகுதியை சேர்ந்த செந்தில் என்பவர் மூலம் படகில் கடலுக்கு அழைத்து செல்வதாக கூறி சுலோச்சனாவை சோமநாதப்பட்டினம் கடற்கரைக்கு ரமேஷ் அழைத்து வந்துள்ளார். அவர்கள் படகில் சென்றனர். படகை செந்தில் ஓட்டியுள்ளார்.

கடலில் சிறிது தூரம் சென்றவுடன் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ், சுலோச்சனாவின் கழுத்தை நெரித்துள்ளார். பின்னர் கூர்மையான ஆயுதத்தால் அவருடைய கழுத்தை அறுத்து கொலை செய்து அவரது உடலை கடலில் வீசியுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்தநிலையில் பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் மூதாட்டியை கொலை செய்து தலைமறைவாக உள்ள ரமேஷை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்