அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த சிறுவன் மின்சாரம் தாக்கி பலி
வேலூரில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த சிறுவன் மின்சாரம் தாக்கி பலியானான். தாய் லேசான காயத்துடன் உயிர்தப்பினார்.
வேலூரில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த சிறுவன் மின்சாரம் தாக்கி பலியானான். தாய் லேசான காயத்துடன் உயிர்தப்பினார்.
நிலத்துக்கு சென்றனர்
வேலூர் சாய்நாதபுரத்தை அடுத்த பாலமதிரோடு முருகன் நகரைச் சேர்ந்தவர் மணி. விவசாயி. இவருடைய மனைவி ரேவதி. இவர்களுக்கு தினேஷ்குமார் (வயது 14) என்ற மகன் உண்டு. இவன் சாய்நாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இவர்களுக்கு அந்த பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அதில் கீரை பயிரிட்டுள்ளனர்.
ரேவதியும், தினேஷ்குமாரும் நிலத்தில் அகத்திக்கீரையை அறுத்து கட்டிக்கொண்டு அதை தினேஷ்குமார் சைக்கிளில் வைத்து தள்ளிக்கொண்டு வந்தான். ரேவதி பின்னால் கீரை கட்டை பிடித்தபடி நடந்து சென்று கொண்டிருந்தார்.
மின்சாரம் தாக்கி பலி
நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் மின்கம்பி அறுந்து கீழே கிடந்துள்ளது. இதனை கவனிக்காமல் சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்த தினேஷ்குமார் மின் கம்பியை மிதித்து விட்டான். இதில் அவன் மீது மின்சாரம் பாய்ந்தது. மேலும் சைக்கிளை பிடித்துக் கொண்டு வந்த ரேவதியையும் மின்சாரம் தாக்கியது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். தனது கண் முன்பே மகன் இறந்ததைக் கண்டு அவர் அலறி துடித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பாகாயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சொக்கலிங்கம், வேலாயுதம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான மாணவன் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.