4 கிலோ மீட்டர் தூரம் காட்பாடிக்கு இழுத்து வரப்பட்ட வாலிபர் உடல்

ரெயிலில் அடிப்பட்டு வாலிபர் இறந்தார். அவரது உடல் என்ஜினில் சிக்கி சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் காட்பாடிக்கு இழுத்து வரப்பட்டது.;

Update: 2022-09-18 18:45 GMT

ரெயிலில் அடிப்பட்டு வாலிபர் இறந்தார். அவரது உடல் என்ஜினில் சிக்கி சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் காட்பாடிக்கு இழுத்து வரப்பட்டது.

வாலிபர் சாவு

சென்னையில் இருந்து மங்களூரு நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் சம்பவத்தன்று நள்ளிரவு சேவூர் பகுதியை தாண்டி வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயிலில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அடிப்பட்டு இறந்தார். அவரது உடல் ரெயில் என்ஜினில் மாட்டிக் கொண்டது. இதையறிந்த ரெயில்வே ஊழியர்கள் ரெயிலை நிறுத்தி உடலை மீட்க முயன்றனர். இரவு நேரம் என்பதாலும், உடலை மீட்க முடியாததாலும் அந்த முயற்சியை கைவிட்டனர்.

பின்னர் ரெயிலை காட்பாடி ரெயில் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதனால் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் என்ஜின் முன்பு சிக்கிய உடலுடன் ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு வந்தது.

பயணிகள் அதிர்ச்சி

அப்போது ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் என்ஜின் முன்னால் உடல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பெண்கள் சிலர் அலறியடித்து ஓடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் காட்பாடியில் இருந்து 20 நிமிடங்கள் தாமதமாக ரெயில் மங்களூரு நோக்கி புறப்பட்டு சென்றது.

இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்