விபத்தில் பலியான 2 வாலிபர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
விபத்தில் பலியான 2 வாலிபர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரி முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் ஜிம் ரெஜினால்டு (வயது 21). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். இவருடைய நண்பர் வெட்டூர்ணிமடத்தை சேர்ந்த கிரேசன் டெனியல் (23), என்ஜினீயர்.
இந்த நிலையில் நண்பர்கள் 2 பேரும் ஞாலம் பகுதியில் உள்ள ஒரு கால்வாயில் குளிப்பதற்காக மோட்டார் சைக்கிள் சென்றனர். அங்கு குளித்து விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். ஆலம்பாறை பகுதியில் வந்தபோது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஜிம் ரெஜினால்டு, கிரேசன் டெனியல் ஆகிய 2 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை நடந்ததும் லாரியை டிரைவர் அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து கோட்டார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது லாரியை ஓட்டி வந்தது திருவனந்தபுரத்தை சேர்ந்த திலீப்குமார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து திலீப்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே பலியான 2 பேரின் உடல்கள் நேற்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.