திருவொற்றியூரில் கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கி மாயமான 2 பேரின் உடல்கள் கரை ஒதுங்கியது - மற்ற 2 பேரின் கதி என்ன?

திருவொற்றியூரில் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி மாயமான 4 பேரில் 2 பேரின் உடல்கள் கரை ஒதுங்கியது. மற்ற 2 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

Update: 2022-08-16 06:19 GMT

சென்னை கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகர், 2-வது தெருவைச் சேர்ந்தவர் கரீம் மொய்தீன். இவரது குடும்பத்தினர் 9 பேர் நேற்று முன்தினம் காலை திருவொற்றியூர் பலகை தொட்டிக்குப்பம் அருகே கடலில் குளித்தனர்.

அப்போது ராட்சத அலையில் சிக்கி ஆட்டோ டிரைவர் கபீர் (வயது 24), சிறுமி அம்ரீன் (18), அவருடைய தம்பி ஆபான் (14), அவர்களது நண்பர் சபரி (16) ஆகிய 4 பேரும் கடலில் மூழ்கினர்.

அவர்களை அருகில் இருந்த மீனவர்களும், உறவினர்களும் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. 4 பேரும் கடலில் மூழ்கி மாயமானார்கள். அவர்களை தேடும் பணியில் திருவொற்றியூர் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் மெரினா நீச்சல் படை சிறப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை மாயமான 4 பேரில் சபரியின் உடல், அவர்கள் கடலில் மூழ்கிய இடத்தின் அருகே கரை ஒதுங்கியது. அதேபோல் திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே சிறுமி அம்ரீன் உடலும் கரை ஒதுங்கியது.

போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான சபரி, பிளஸ்-1 மாணவர் ஆவார். நண்பர்கள் கடலில் குளிக்க செல்வதை அறிந்து அவர்களுடன் வந்தபோது கடலில் மூழ்கி பலியானார். 2 பேரின் உடல்களை பார்த்து அவர்களின் பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

மேலும் கடலில் மூழ்கி மாயமான கபீர், ஆபான் ஆகிய மற்ற 2 பேரின் நிலை என்ன ஆனது? என்பது தெரியவில்லை. இதனால் அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தவிப்பில் உள்ளனர். அவர்கள் கடற்கரையோரம் கவலையுடன் காத்திருக்கின்றனர். நேற்று 2-வது நாளாக அவர்கள் 2 பேரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்