பெண்ணை கடித்து குதறிய கரடி; ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

விக்கிரமசிங்கபுரத்தில் பெண்ணை கரடி கடித்துக் குதறியது. இதில் படுகாயம் அடைந்த அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-09-21 19:35 GMT

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரத்தில் பெண்ணை கரடி கடித்துக் குதறியது. இதில் படுகாயம் அடைந்த அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குட்டியுடன் வரும் கரடி

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் கோட்டவிளைப்பட்டி தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை. கூலித்தொழிலாளியான இவருடைய மனைவி கலையரசி (வயது 47). இவர் நேற்று அதிகாலையில் வீட்டின் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார்.

அப்போது, அங்கு குட்டியுடன் கரடி நின்று கொண்டு இருந்தது. அந்த கரடி திடீரென்று கலையரசியை கடித்துக் குதறியது. கரடியின் பிடியில் இருந்து அவரால் தப்ப முடியவில்லை. இதனால் அவர் சத்தம் போட்டார்.

பெண் படுகாயம்

அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அவர்களை பார்த்த கரடி தனது குட்டியுடன் அங்கிருந்து ஓடிவிட்டது. கரடி கடித்து குதறியதில் கலையரசியின் தோள் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'பாபநாசம், விக்கிரமசிங்கபுரம் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கரடி சுற்றிவருகிறது. தற்போது, கரடி பெண்ணை கடித்து காயப்படுத்தி உள்ளது. இதனால் நாங்கள் அச்சத்தில் உள்ளோம். எனவே, இந்த பகுதியில் சுற்றித்திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

விக்கிரமசிங்கபுரத்தில் பெண்ணை கரடி கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்