விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

குமரி ஆழ்கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியதால் குளச்சல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

Update: 2023-09-05 18:45 GMT

குளச்சல்:

குமரி ஆழ்கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியதால் குளச்சல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

பலத்த சூறைக்காற்று

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 1000-க்கும் மேற்பட்ட வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதி வரை சென்று 7 முதல் 10 நாட்கள் வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்புவது வழக்கம். ஆழ்கடல் பகுதியில் கேரை, கணவாய், இறால், புல்லன், கிளிமீன்கள், செம்மீன் போன்ற உயர்ரக மீன்கள் கிடைக்கும். தற்போது கணவாய், நாக்கண்டம் போன்ற மீன்கள் கிடைத்து வருகிறது.

இந்தநிலையில் தென் தமிழக கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய கன்னியாகுமரி கடல் பகுதிகளில் 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், சில நேரங்களில் 65 கி.மீ. வேகத்திலும் பலத்த சூறைக்காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, அந்த பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

மீன்பிடிக்க செல்லவில்லை

இந்தநிலையில் குமரி ஆழ்கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்ததாலும், குளச்சல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதாலும் நேற்று விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

ஆனால், ஒரு சில வள்ளம், கட்டுமர மீனவர்கள் மட்டும் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இதற்கிடையே நேற்று ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்து விட்டு சில விசைப்படகுகள் கரைக்கு திரும்பின. அந்த விசைப்படகுகளில் ஏராளமான கணவாய், நாக்கண்டம் மீன்கள் கிடைத்திருந்தன. அவை ஏலக்கூடத்துக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அவற்றை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கினர். இந்த வகை மீன்கள் வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்