உபா சட்டத்தில் கைதான 6 பேரும் சென்னை அழைத்து செல்லப்பட்டனர்

கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உபா சட்டத்தில் கைதான 6 பேரும் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Update: 2022-11-07 18:45 GMT


கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உபா சட்டத்தில் கைதான 6 பேரும் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கார் வெடிப்பு

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த மாதம் 23-ந் தேதி கார் வெடித்து அதற்குள் இருந்த ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதுடன், அவருடைய வீட்டில் இருந்து 75 கிலோ வெடி பொருட்கள் மற்றும் ஐ.எஸ். ஆதரவு தொடர்பான குறிப்புகள் உள்பட பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும் பலியான ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்ததாக கோவையை சேர்ந்த முகமது அசாருதீன் (23), அப்சர்கான் (28), முகமது தல்கா (25), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (26), முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேர் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

6 பேர் கைது

தற்போது இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டு சென்னை பூந்தமல்லியில் உள்ளது. இந்த கோர்ட்டில் அனுமதி பெற்ற பின்னரே கோவைக்கு வந்து 6 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்தனர்.

மேலும் அவர்கள் 6 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்துவதற்கு வசதியாக கோவையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றம் செய்ய என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்து, அதற்காக கோர்ட்டில் அனுமதியும் பெற்றனர்.

சென்னைக்கு அழைத்து சென்றனர்

இதையடுத்து நேற்று கோவை வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், கோவை மத்திய சிறைக்கு சென்று, இந்த வழக்கில் கைதான 6 பேரையும் புழல் சிறைக்கு கொண்டு செல்வதற்கான கோர்ட்டு உத்தரவை காண்பித்தனர். இதை தொடர்ந்து 6 பேரையும் அழைத்துச்செல்ல சிறை அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.

தொடர்ந்து கார் வெடிப்பு வழக்கில் கைதான முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரரையும் வேனில் ஏற்றி, துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் பலத்த பாதுகாப்புடன் நேற்று மதியம் 12 மணியளவில் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதுகுறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறியதாவது:-

புழல் சிறை

முகமது அசாருதீன் உள்ளிட்ட 6 பேரையும் சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பின்னர் புழல் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

பின்னர் 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்ய உள்ளோம். அனுமதி கிடைத்ததும், அவர்களை கோவைக்கு அழைத்து வந்து, 6 பேர் வீடுகளிலும் சோதனை நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்