கட்சியின் 34-வது ஆண்டு விழா ஒவ்வொரு தெருவிலும் பா.ம.க. கொடியேற்றுங்கள்

34-வது ஆண்டு விழாவையொட்டி ஒவ்வொரு தெருவிலும் பா.ம.க. கொடியேற்ற வேண்டும் என்று தொண்டர்களை டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Update: 2022-07-10 23:20 GMT

சென்னை,

தமிழ்நாட்டு அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாகவும், மக்களுக்கான உரிமைகளை வென்றெடுத்து கொடுப்பதை முழு நேரப்பணியாக கொண்டிருக்கும் கட்சியாகவும் திகழும் பா.ம.க., வரும் 16-ந்தேதி 33 ஆண்டுகளை நிறைவு செய்து 34-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில் தொண்டர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒடுக்கப்பட்ட மக்களே ஒன்று சேருங்கள், சமூகநீதி நிச்சயம், சமத்துவமே லட்சியம் என்ற கொள்கை முழக்கத்துடன் தொடங்கப்பட்ட பா.ம.க. இன்று வரை அந்த கொள்கையில் உறுதியுடன், லட்சியத்தை நோக்கி வீறுநடை போட்டுக்கொண்டிருப்பது நமக்கு பெருமை. ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் முதன்மை நோக்கம் என்பது ஆட்சியை கைப்பற்றுவதும், அதன் மூலம் கிடைக்கும் அதிகாரத்தின் வழியாக மக்களுக்கு நன்மை செய்வதும்தான்.

மக்களை சந்தியுங்கள்

பல கட்சிகள் ஆட்சிக்கு வந்திருக்கலாம், ஆனால், வரலாற்றில் நிலைக்கும் அளவுக்கு அவர்களின் கணக்கில் சாதனைகள் இல்லை. ஆனால், பா.ம.க. இன்னும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரவில்லை, அதே நேரத்தில் அதன் கணக்கில் சாதனைகள் ஏராளமாக உள்ளன.

ஆனாலும் ஆட்சியை கைப்பற்றும் இலக்கு மட்டும் நழுவிக்கொண்டே செல்கிறதே? என்ற கவலை மனதின் ஓரத்தில் என்னை உறுத்திக்கொண்டு தான் இருக்கிறது. அக்கவலையை தீர்க்கும் அருமருந்து உங்களிடம்தான் உள்ளது. உனது உழைப்புதான் அந்த அருமருந்து. அதை நீயே நன்றாக அறிவாய்.

பா.ம.க. 34-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில் உங்களை நான் கேட்டுக்கொள்வதெல்லாம், ''மக்களை சந்தியுங்கள், அவர்களின் தேவைகளை அறியுங்கள், அவர்களுக்காக போராடி கோரிக்கைகளை நிறைவேற்றி தாருங்கள்'' என்பதைதான். மக்களின் ஆதரவை பெறாமல் வெற்றி சாத்தியமல்ல.

பா.ம.க. கொடி

அதனால், இன்னும் 20 மாதங்களுக்கு பிறகு தானே நாடாளுமன்ற தேர்தல் வருகிறது என்ற அலட்சியம் வேண்டாம். இப்போதே தேர்தல் பணிகளை தொடங்குங்கள். நமக்கான பொறுப்புணர்வுடன் ஆண்டு விழாவை கொண்டாட வேண்டும்.

ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருவிலும் பா.ம.க. கொடி ஏற்றப்பட வேண்டும். வாய்ப்புள்ள இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். பா.ம.க. தொடக்க விழாவுக்கான இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் வழக்கமானவையாக இல்லாமல், இலக்கை எட்டுவதற்கான பயணத்தின் தொடக்கமாக அமையட்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்