20 நாட்களாக நடந்த தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்
20 நாட்களாக நடந்த தோட்டக்கலைத் துறை ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டு உள்ளது.
ஊட்டி
20 நாட்களாக நடந்த தோட்டக்கலைத் துறை ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டு உள்ளது.
போராட்டம்
நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையில் பணியாற்றி வரும் பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களின் சிறப்பு காலமுறை ஊதியத்தை, காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும். தோட்டக்கலைத்துறையில் தினக்கூலி பணியாளர்களாக பணியாற்றும் பண்ணை மற்றும் பூங்கா பணியாளர்களுக்கு தினசரி ரூ.400 ஆக உள்ள ஊதியத்தை ரூ.700 ஆக உயர்த்த வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கடந்த 23-ந் தேதி முதல் தோட்டக்கலை துறை ஊழியர்கள் பணிகளைப் புறக்கணித்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதன்படி மரத்துக்கு மனு கொடுத்தல் தாவரவியல் பூங்கா குட்டையில் இறங்கி போராடுதல் முதலமைச்சருக்கு மனு அனுப்புதல் மற்றும் ரேஷன் கார்டுகளை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தல் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
தற்காலிகமாக வாபஸ்
அதிகாரிகள், ஊழியர்களிடம் நடத்திய 4 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்திருந்தது. இந்த நிலையில் தோட்டக்கலை துறை அலுவலர்களுடன், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தையில் ஈடுபட அழைப்பு விடுத்திருந்தார்.
இதை தொடர்ந்து தோட்டக்கலை துறை ஊழியர்கள் கலந்து ஆலோசனை செய்து போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். மேலும் ஊழியர்களில் ஒரு பிரிவினர் பேச்சுவார்த்தைக்காக சென்னைக்கு சென்றுள்ளனர்.
இந்தநிலையில் நேற்று ஊழியர்கள் பூங்காவுக்கு பணிக்கு திரும்பினர். ஆனால் பூங்கா வருகை பதிவேட்டில் கையெழுத்திடாமல் பணிக்கு செல்வதாக அறிவித்தனர்.
வருகைப்பதிவேட்டில் கையெழுத்து போட்டு தான் பணி செய்ய வேண்டும் என்று பூங்கா நிர்வாகத்தினர் அறிவுறுத்தியதால், வழக்கமான பணிகளை மேற்கொள்ளாமல் வீடு திரும்பினர். எனவே பூங்காவில் மலர் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது உள்ளிட்ட பணிகளை அதிகாரிகளும், அலுவலர்களும் மேற்கொண்டனர்.