துணை மின்நிலைய பராமரிப்பு தேதியை மாற்ற வேண்டும் என்றுசமத்துவ மக்கள் கழகத்தினர் கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் துணை மின்நிலைய பராமரிப்பு தேதியை மாற்ற வேண்டும் என்று சமத்துவ மக்கள் கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் வர்த்தக அணி செயலாளர் சிவசு. முத்துக்குமார் தலைமையில் மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் முன்னிலையில் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்துசெல்வம், மாநகர செயலாளர் உதயசூரியன், வக்கீல் சகாயராஜ் மற்றும் நிர்வாகிகள் தூத்துக்குடி மின்சார வாரிய அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது. வருகிற 23-ந் தேதி ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் தசரா விழா கொண்டாடப்படுகிறது. இந்த காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் தசரா விரதம் கடைபிடித்து வீடுகளில் இருந்து வருகிறார்கள். அவர்கள் மின் நிறுத்தத்தால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவார்கள். மேலும் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், பொதுமக்கள் விடுமுறை தினமான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் பொருட்கள் வாங்க குடும்பத்துடன் பஜாரில் கூடுவார்கள். இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், சிறு தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளவர்கள். ஆகையால் பொதுமக்கள், வியாபாரிகள் நலன் கருதி தீபாவளி பண்டிகைக்கு பிறகு வேறு தேதியில் துணை மின்நிலைய மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளனர்.