தரங்கம்பாடி-மயிலாடுதுறை ரெயில் சேவை மீண்டும் தொடங்க வேண்டும்
தரங்கம்பாடி-மயிலாடுதுறை ரெயில் சேவை மீண்டும் தொடங்க வேண்டும் என ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொறையாறு:
தரங்கம்பாடி வட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு சங்கத் தலைவர் பாவலர் ராசமாணிக்கம் தலைமை தாங்கினார். பொருளாளர் ராஜேந்திரன் வரவேற்றார். தமிழிசை மூவருள் ஒருவரான தில்லையாடி அருணாசலக்கவிராயருக்கு சிலை நிறுவி, தமிழிசைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை பரப்பும் வகையில் செயல்பட்டு வரும் இயல், இசை, நாடக மன்ற நிறுவனர் மற்றும் நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயலாளர் சுப்ரமணியன், அமைப்பாளர் ஜெகதீசன், செயற்குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜன், சுயம் பிரகாசம் ஆகியோர் பேசினர். தில்லையாடி அருணாசலக்கவிராயர் இயல், இசை, நாடக மன்ற நிறுவனர் வீராசாமி பேசினார். கூட்டத்தில் அருணாசலக் கவிராயருக்கு, அவர் பிறந்த ஊரான தில்லையாடியில் தமிழக அரசு சார்பில் நினைவிடம் அமைக்க வேண்டும். மயிலாடுதுறை-தரங்கம்பாடி இடையே ஆங்கிலேயர் ஆட்சியில் தொடங்கிய ரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட வேண்டும். தமிழ் தொண்டாற்றிய சீகன்பால்குவுக்கு தரங்கம்பாடியில் மணி மண்டபம் அமைக்க வேண்டும்.பொறையாரிலிருந்து சென்னைக்கு இரவு நேரத்தில் கூடுதல் பஸ்கள் நாள் தோறும் இயக்கப்பட வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தரங்கம்பாடி வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள், சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.