திருப்பரங்குன்றத்தில் குப்பை தொட்டியாக மாறிவரும் நிலையூர் கால்வாய்- குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

திருப்பரங்குன்றத்தில் நிலையூர் கால்வாய் குப்பை தொட்டியாக மாறி வருகிறது. குவிந்து கிடக்கும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

Update: 2023-05-15 20:30 GMT

திருப்பரங்குன்றம்,


திருப்பரங்குன்றத்தில் நிலையூர் கால்வாய் குப்பை தொட்டியாக மாறி வருகிறது. குவிந்து கிடக்கும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

விவசாயிகள் புகார்

திருப்பரங்குன்றத்தில் விவசாயிகளின் முதுகெலும்பாக தென்கால் கண்மாய், நிலையூர் கண்மாய் மற்றும் 5 குளங்கள் உள்ளன. இந்த கண்மாய்களுக்கு வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. சோழவந்தான் முள்ளிப்பள்ளம் பிரிவில் இருந்து நிலையூர் கால்வாய் வழியே கரையின் இருபுறமும் ததும்பியபடி தண்ணீர் பெருக்கெடுத்து கண்மாய்களுக்கும் வரும்.

ஆனால் நிலையூர் கால்வாயை பராமரிப்பதிலும், பாதுகாப்பதிலும் பொதுப்பணி துறையினர் கண்டுகொள்வதில்லை எனவும், கண்மாய்களுக்கு தண்ணீர் வரும் நேரத்தில் மட்டுமே நிலையூர் கால்வாய் பக்கம் வந்து செல்கின்றனர் என்றும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

குப்பை தொட்டியாக

இதனால் நாகமலை புதுக்கோட்டை, வடிவேல்கரை விளாச்சேரி, திருப்பரங்குன்றம் தேவிநகர், சந்திரபாளையம், ஹார்விப்பட்டி பகுதி குடியிருப்புகள் சார்ந்து உள்ள நிலையூர் கால்வாய் குப்பைதொட்டியாக மாறி வருகிறது. இந்தபகுதியில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை கொட்டுவதற்காக மாநகராட்சி நிர்வாகம் குப்பைதொட்டிகள் வைத்தபோதிலும் அதில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துவதில்லை.

மேலும், வீடுகளில் சேரும் குப்பைகளை வாங்குவதுமில்லை. இதனால் மக்கள் குப்பைகளை கால்வாயில் போட்டு வருகின்றனர். தற்போது நிலையூர் கால்வாய் குப்பை தொட்டியாக மாறி வருவதால் வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கண்மாய்களுக்கு சீராக செல்வதில்லை. இதன் காரணமாக விவசாயம் கேள்விக்குறியாகி விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

ேகாரிக்கை

இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெய்த தொடர்மழையால் நிலையூர் கால்வாயில் குப்பைகளும், பிளாஸ்டிக் பைகளுமாக மலைபோல குவிந்து கிடக்கின்றன. மழை தண்ணீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டு குடியிருப்புக்குள் புகுந்தது. இதையடுத்து மாநகராட்சி மேற்கு மண்டல நிர்வாகம் சார்பில் தேவி நகர், சந்திர பாளையம் பகுதியில் குப்பைகளை அள்ளி சாலை ஓரங்களில் குவித்தன. ஆனால் அதை அப்புறப்படுத்தவில்லை. சுகாதார பிரிவு மற்றும் பொறியாளர் பிரிவு இடையே குப்பையை யார்? அப்புறப்படுத்துவது என்ற போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.

இதனால் 15 நாட்களாகியும் குப்பைகள் அகற்றப்படாத நிலையில் சாலை நெடுகிலும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றி கால்வாயை சுத்தப்படுத்த வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்