உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம்

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது.

Update: 2023-02-05 19:39 GMT

திசையன்விளை:

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது.

சுயம்புலிங்க சுவாமி கோவில்

தமிழ்நாட்டில் சிவாலயங்களில் பழமையானது நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலாகும். இங்கு சுவாமி சுயம்புவாக தோன்றி அருள்புரிந்து வருகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா தேரோட்டம் நடைபெறும்.

அதுேபால் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது. விழா நாட்களில் காலையில் விநாயகர் வீதி உலா வருதல், இரவு சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை இந்திர வாகனம், கஜவாகனம், அன்ன வாகனம், கைலாய பர்வத வாகனம், காமதேனுவாகனம், குதிரை வாகனம், சட்டங்கால் சப்பரம், ரிஷப வாகனங்களில் எழுந்தருளி ரதவீதிகளில் வீதி உலா வந்தனர்.

தேரோட்டம்

9-ந் திருவிழாவான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. விநாயகர், சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை சுவாமிகள் தேரில் எழுந்தருளினர். அதை தொடர்ந்து காலை 8.05 மணிக்கு சபாநாயகர் அப்பாவு வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன், டாக்டர் நிர்மலா ராதாகிருஷ்ணன், ராஜகோபுர கமிட்டி தலைவர் ஜி.டி.முருகேசன், துணைத்தலைவர் கனகலிங்கம், ராஜகோபுர கமிட்டி நிர்வாகிகள் ராஜாமணி, சுடலை மூர்த்தி செண்பகவேல், தேர் திருப்பணி குழு தலைவர் சிவானந்தம், துணைத்தலைவர் தர்மலிங்க உடையார், உவரி பஞ்சாயத்து துணைத்தலைவர் ஆறுமுகராஜன் கிருபாநிதி, திசையன்விளை சண்முகவேல் பர்னிச்சர் மணிகண்டன், எஸ்.வி. டிரேடர்ஸ் பிரமகுமார், சக்தி டிரேடர்ஸ் முருகேசன், திருநாவுக்கரசு அன்கோ கோவிந்தன், உவரி சுயம்புலிங்க சுவாமி ஹார்டுவேர்ஸ் சிவ ரமேஷ், நகைச்சுவை நடிகர் அமிர்தலிங்கம் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பக்தர்கள் நேர்த்திக்கடன்

தேரானது நான்கு ரதவீதிகள் வழியாக வந்து காலை 11.15 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கடல் மண்ணை பெட்டியில் சுமந்துவந்து கரையில் கொட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நெல்லை, குமரி மாவட்டத்தில் இருந்து உவரிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. விழாவில் இன்று (திங்கட்கிழமை) காலை பஞ்சமூர்த்தி சுவாமிகள் ஊர்வலமும், இரவில் தெப்பத் திருவிழாவும் நடக்கிறது.

ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்