வடவள்ளி
மருதமலை சுப்பிர மணியசுவாமி கோவில் தைப்பூச தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில்அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்தனர்.
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்
கோவையில் உள்ள மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் பக்தர்களால் முருகனின் ஏழாவது படை வீடு என போற்றப்படுகிறது. இதன் தைப்பூசத் திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் காலை,மாலை சிறப்பு பூஜைகள், யாகசாலை பூஜைகள் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நேற்று நடைபெற்றது. நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் கோபூஜை நடந்தது. தொடர்ந்து மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், ஜவ்வாது போன்ற 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மூலவருக்கு புதிய பட்டாடை அணிவிக்கப்பட்டு தங்க காசுகள் பதிக்கப்பட்ட தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.
திருக்கல்யாணம்
இதை அடுத்து சுப்பிரமணியசுவாமி வள்ளி,தெய்வானையுடன் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினார். வள்ளியம்மன் வண்ணப்பட்டாடைகள் உடுத்தியும், தெய்வானை நீலப் பட்டு உடுத்தியும் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் எழுந்தருளினர். விநாயகர் பூஜையை தொடர்ந்து சுவாமிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை அடுத்து யாகம் வளர்க்கப்பட்டு தாரை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. மங்கல வாத்தியங்கள் முழங்க காலை 8 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானைக்கு மங்களநாணை அணிவித்தார். அப்போது திரண்டிருந்த பக்தர்கள் மருதமலை முருகனுக்கு அரோகரா... வேலவனுக்கு அரோகரா என கோஷமிட்டவாறு வழிபட்டனர்.
இதனை அடுத்து ஊஞ்சல் உற்சவம் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பொற்சுண்ணம் அரைத்து சுவாமிக்கு சாற்றப்பட்டது. தொடர்ந்து பாத காணிக்கை, பக்தர்கள் திருக்கல்யாணத்திற்கு மொய்பணம் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரூ.35ஆயிரத்து 513 வசூல் ஆனது. இதைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு திருமாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது.
தேேராட்டம்
இதை அடுத்து சுப்பிரமணியசுவாமி வள்ளி,தெய்வானையுடன் வெள்ளை யானை வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி வீதி உலா வந்து பெரிய தேரில் எழுந்தருளினார். சிறிய தேரில் விநாயகர், வீரபாகுத்தேவர், எழுந்தருளினர். காலை 11.30 மணிக்கு ஆறுநாட்டு ஊர் கவுண்டர்களுக்கும் வடவள்ளி ஊர் பொதுமக்களுக்கும் மரியாதை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து காலை 12 மணிக்கு முக்கிய பிரமுகர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது மருதமலை முருகனுக்கு அரோகரா.... கந்தனுக்கு அரோகரா....என்று பக்தர்கள் பக்தி முழக்கமிட்டனர். பக்தர்கள் வெள்ளத்தில் திருத்தேர் சுற்றி வந்தது. பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் அடிவாரத்தில் இருந்து மலைக்கு மினிபஸ்களும் அரசு போக்குவரத்து பஸ்களும் இயக்கப்பட்டன. பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பெயரில் பேரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டியன், வடவள்ளி இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை ஆகியோர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.