கடன் தொல்லையால் ஜவுளி வியாபாரி தற்கொலை

நிலக்கோட்டை அருகே கடன் தொல்லையால் ஜவுளி வியாபாரி தற்கொலை செய்து கொண்டார். தனியார் வங்கி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, உருக்கமான வீடியோவை அவர் பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-06-02 16:31 GMT

ஜவுளி வியாபாரி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள குண்டலபட்டியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 46). இவர், வீடு வீடாக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். அவருடைய மனைவி அழகேஸ்வரி. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வீடு கட்டுவதற்காக தனியார் வங்கியில் லட்சுமணன் கடன் வாங்கினார். 3 ஆண்டுகளாக கடன் தொகையை அவர் செலுத்தியதாக தெரிகிறது.

அதன்பிறகு போதிய வருமானம் இல்லாததால், கடன் தொகையை லட்சுமணனால் திருப்பி செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் கடன் கொடுத்த வங்கி நிர்வாகம் சார்பில், அவருக்கு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

கடன் பிரச்சினை தொடர்பாக லெட்சுமணனுக்கும், அவருடைய மனைவி அழகேஸ்வரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. அதன்படி நேற்று முன்தினம் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு அழகேஸ்வரி சென்று விட்டார். இதன் காரணமாக லட்சுமணன் மனம் உடைந்தார்.

மேலும் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி  வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உருக்கமான வீடியோ பதிவு

இதற்கிடையே தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, உருக்கமான வீடியோ ஒன்றை தனது உறவினர்களுக்கு லட்சுமணன் அனுப்பி வைத்தார். மேலும் சமூக வலைத்தளங்களிலும் வீடியோவை அவர் பதிவிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

என் மரணத்துக்கு தனியார் வங்கி தான் காரணம். தனியார் வங்கியிடம் ரூ.6 லட்சத்து 87 ஆயிரம் கடன் வாங்கினேன். ஆரம்பத்தில் குறைந்த வட்டி என்று கூறி பின்னர் கூடுதல் வட்டி வசூலித்தனர்.

என்னை நம்பி, 5 பேர் அந்த வங்கியில் கடன் வாங்கினர். அவர்களையும், தர்மசங்கடத்தில் தலைகுனிய வைக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். இந்த 5 பேரும் என்னை மன்னித்து விடுங்கள்.

தொழிலில் நஷ்டம்

நான் வாங்கிய கடன் தொகையை, கடந்த 3 வருடங்களாக செலுத்தி வந்தேன். கொரோனா தொற்று காலத்தில் கூட கடனை செலுத்தினேன். ஆனால் தற்போது நூல் விலை உயர்ந்து விட்டதால், 10 பேர் வேலை செய்த இடத்தில் 2 பேர் தான் வேலை செய்யக்கூடிய அளவுக்கு ஜவுளி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

என் சாவுக்கு முழுக்காரணம் தனியார் வங்கியும், அந்த வங்கியில் இடைத்தரகராக செயல்பட்ட ஒருவரும் தான். என்னுடைய சாவுக்கு நியாயம் கிடைக்க, எனது வீட்டுக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த வீடியோவில் லட்சுமணன் உருக்கமாக பேசி பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

போலீஸ் விசாரணை

இந்தநிலையில் அந்த வீடியோவை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலா முத்தையா தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர்.

ஆனால் அதற்குள் லட்சுமணன், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து விட்டார். இதனையடுத்து அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்