விழுப்புரம் கோர்ட்டில் 2 போலீஸ் அதிகாரிகள் சாட்சியம்

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் விழுப்புரம் கோர்ட்டில் 2 போலீஸ் அதிகாரிகள் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். மேலும் 21-ந் தேதி கடலூர் போலீஸ் சூப்பிரண்டு ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது;

Update:2022-06-17 23:26 IST

விழுப்புரம்

பாலியல் தொல்லை வழக்கு

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கின் புகார்தாரரான பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் 13 நாட்களாக குறுக்கு விசாரணையை நடத்தினார்.

இந்நிலையில் நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆஜராகவில்லை.

2 போலீஸ் அதிகாரிகள் சாட்சியம்

இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டும் தற்போது சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருபவருமான மகேஸ்வரன், அப்போதைய துறையூர் இன்ஸ்பெக்டரும் தற்போது முசிறியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவருமான விதுன்குமார் ஆகிய இருவரும் நீதிபதி புஷ்பராணி முன்பு நேரில் ஆஜராகி இவ்வழக்கு தொடர்பாக சாட்சியம் அளித்தனர். பின்னர் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் தினகரன், 2 சாட்சிகளிடமும் குறுக்கு விசாரணை செய்வதற்கு கால அவகாசம் கேட்டு மனுதாக்கல் செய்தார். அதற்கு அரசு தரப்பு வக்கீல் வைத்தியநாதன் ஆட்சேபனை தெரிவித்து பதில் மனுதாக்கல் செய்தார்.

கடலூர் போலீஸ் சூப்பிரண்டு

மேலும் அரசு தரப்பு 6-வது சாட்சியான ஐ.ஏ.எஸ். அதிகாரி பார்த்திபனிடம் நாங்கள் குறுக்கு விசாரணை செய்து முடித்த பிறகே மற்ற சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்று முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் கூறினார். அதனை ஏற்க மறுத்த நீதிபதி புஷ்பராணி, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பிடம், நீங்கள் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணையை எப்போது வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளுங்கள், அதுவரை மற்ற சாட்சிகளை விசாரிக்காமல் இருக்க முடியாது என்று கூறினார்.

தொடர்ந்து, சாட்சிகள் மகேஸ்வரன், விதுன்குமார் ஆகிய இருவரிடமும் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு குறுக்கு விசாரணை செய்வதற்காக இவ்வழக்கை வருகிற 21-ந் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்ததோடு அன்றைய தினம் மகேஸ்வரன், விதுன்குமார் ஆகிய இருவரும் நேரில் ஆஜராகும்படி நீதிபதி புஷ்பராணி கூறினார். மேலும் அதே நாளில் அரசு தரப்பு சாட்சியான தற்போது கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வரும் சக்திகணேசன் கோர்ட்டில் நேரில் ஆஜர் ஆகும்படி சம்மன் அனுப்புமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்