சாத்தான்குளம் வழக்கில் சாட்சியம்:போலீஸ் நிலையம், சிறையில் இருந்த ரத்தக்கறைகளை உறுதிப்படுத்திய நீதிபதி

சாத்தான்குளம் வழக்கில் நீதிபதி பாரதிதாசன் நேற்றும் சாட்சியம் அளித்தார். சாத்தான்குளம் போலீஸ் நிலையம் மற்றும் கோவில்பட்டி சிறையில் இருந்த ரத்தக்கறையையும் அவர் உறுதிப்படுத்தினார்.

Update: 2023-10-06 00:38 GMT


சாத்தான்குளம் வழக்கு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களை போலீசார் கடுமையாக தாக்கியதில் இருவரும் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து, சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசாரை கைது செய்து, மதுரை சிறையில் அடைத்தது. இந்த சம்பவம் நடந்தபோது நீதித்துறை சார்பில் அப்போதைய கோவில்பட்டி நீதிபதி பாரதிதாசன் விசாரணை நடத்தினார். அந்த விசாரணை குறித்து அவர் மதுரை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்திருந்தார். இதனால் அவரையும் இந்த வழக்கின் சாட்சியாக சி.பி.ஐ. சேர்த்து இருந்தது. சாத்தான்குளம் வழக்கு விசாரணை நடந்துவரும் மதுரை கோர்ட்டில் நீதிபதி பாரதிதாசன் சாட்சியம் அளித்து வருகிறார். 4-வது நாளாக அவர் நேற்று நீதிபதி தமிழரசி முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

ரத்தக்கறை

ஜெயராஜ், பென்னிக்சை போலீசார் தாக்கிய லத்தி உள்ளிட்ட பொருட்களை அடையாளம் காட்டினார். மேலும் சாத்தான்குளம் போலீஸ் நிலையம், கோவில்பட்டி சிறை ஆகிய இடங்களில் எந்தெந்த அறைகளில் ஜெயராஜ், பென்னிக்சை அடைத்து இருந்தனர், அங்கு எங்கெல்லாம் ரத்தக்கறைகள் இருந்தன? என்பது பற்றி தனது அறிக்கையில் கூறி இருந்ததை விரிவாக நீதிபதி பாரதிதாசன் எடுத்துரைத்தார். சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரி, கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி ஆகிய இடங்களில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகள் அனைத்தையும் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரிடம் கேட்டுப்பெற்று, அவற்றை தனது அறிக்கையுடன் இணைத்தேன் என்றும் நீதிபதி சாட்சியம் அளித்தார்.

கேமராக்களில் பதிவான காட்சிகளில் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் படுகாயங்களுடன் செல்லும் காட்சிகள் அனைத்தும் பதிவாகியதையும் நீதிபதி பாரதிதாசன் உறுதிப்படுத்தியதாக கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன. அவரது சாட்சியங்களை பதிவு செய்த நீதிபதி தமிழரசி, இந்த வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்