10 ரூபாய் நாணயத்துக்கு வந்த சோதனை

10 ரூபாய் நாணங்களை பொதுமக்கள், வியாபாரிகள் வாங்க மறுக்கின்றனர்.

Update: 2022-10-06 18:45 GMT

500, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை விட 10 ரூபாய் நோட்டுகள் அதிகமாக மக்களின் கைகளை கடந்து செல்கிறது.

10 ரூபாய் நாணயம்

இதனால் 10 ரூபாய் நோட்டுகள் கிழியும் நிலையில், அழுக்குகள் நிறைந்து காணப்படும். எனவே 10 ரூபாய் நோட்டுகளுக்கு பதில் 10 ரூபாய் நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

இந்த நாணயங்கள் முதலில் மக்கள் கைகளுக்கு புழக்கத்துக்கு வந்தபோது வியப்புடன் பார்த்தனர். மக்கள் பலர் ஆர்வமுடன் வாங்கி பரிவர்த்தனை செய்தனர்.

தமிழகத்தில் திருவண்ணாமலை, வேலூர் உள்பட சில மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் செல்லாது என்ற வதந்தி மக்களிடையே பரவியது.

பொதுவாக ஒரு வதந்தி என்பது சில நாட்கள் வரை இருக்கும். ஆனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த 10 ரூபாய் நாணய விவகாரத்தை பொறுத்தவரையில் மக்களிடையே நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத பிரச்சினையாகவே உள்ளது.

10 ரூபாய் நாணயங்கள் செல்லத்தக்கது என்று ரிசர்வ் வங்கி பலமுறை அறிவித்துள்ளது. எனினும் திருவண்ணாமலை மாவட்ட மக்களை விட்டு வதந்தி அகலவில்லை. 10 ரூபாய் நாணயங்களை செல்லாதவையாகவே மக்கள் கருதுகின்றனர்.

வாங்குவதில்லை

திருவண்ணாமலை ஆன்மிக பூமி என்பதால் இங்கு ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் பலர் வருகின்றனர்.

மலையை சுற்றிச் சென்று அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக பவுர்ணமி நாட்களில் மக்கள் வெள்ளத்தில் திருவண்ணாமலை நகரமே மிதக்கும்.

பக்தர்களின் வருகை திருவண்ணாமலை நகரை வர்த்தக மையமாக மாற்றி உள்ளது. திருவண்ணாமலைக்கு வருகை தரும் வெளியூர் மக்கள் 10 ரூபாய் நாணயத்தை கையில் வைத்து கொண்டு அலைகின்றனர்.

சிறு வியாபாரிகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பெரும்பாலான இடங்களில் 10 ரூபாய் நாணயத்தை வாங்குவதில்லை. இதனால் பக்தர்கள் அவதியடைகின்றனர்.

பஸ்களில் கூட இந்த நிலை தான் நீடிக்கிறது. சில்லரையாக கொடுங்கள் என்று கண்டக்டர்கள் கூறுவார்கள். ஆனால் 10 ரூபாய் நாணயத்தை கொடுத்தால் அதை வாங்குவதில்லை.

ரூபாய் நோட்டாக வழங்குங்கள் என்கின்றனர். இதனால் வெளியூர் பயணிகளுக்கும், பஸ் கண்டக்டர்களுக்கும் இடையே தகராறும் ஏற்பட்டுள்ளது.

நகர் முழுவதும் திரியும் சாதுக்களில் சிலர் இந்த நாணயங்களை வாங்க மறுக்கின்றனர் என்ற பேச்சும் அடிபடுகிறது. எனவே 10 ரூபாய் நாணயங்களை வெளியூர் பக்தர்கள் கோவில் உண்டியலில் போட்டுச் செல்கின்றனர்.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

கடைக்கு வரும் திருவண்ணாமலையை சேர்ந்த மக்கள் 10 ரூபாய் நாணயத்தை வாங்குவதில்லை. அவர்கள் வாங்க தொடங்கினால் நாங்களும் வாங்கி விடுவோம் என வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் பொதுமக்கள் தரப்பில் வியாபாரிகள் வாங்கவில்லை அவர்கள் வாங்கினால் நாங்களும் வாங்க தயாராக இருக்கிறோம் என்றும் தெரிவிக்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயம் தொடர்பாக பிரச்சினையில் வியாபாரிகளும், பொதுமக்களும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டுகின்றனர்.

இதற்கு தீர்வாக மாவட்ட நிர்வாகம் தான் களமிறங்கி அவர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது அனைத்து தரப்பு கோரிக்கையாக உள்ளது.

வங்கிகள்

இதுகுறித்து திருவண்ணாமலை நகர வணிக காப்பாளர் ராஜசேகரன் கூறியதாவது:-

அரசு வெளியிட்டுள்ள 10 ரூபாய் நாணயங்களை வியாபாரிகள் வாங்க தயாராக இருக்கிறார்கள். ஆனால் வியாபாரிகளிடமிருந்து பொதுமக்கள் பெற மறுக்கிறார்கள்.

வங்கிகளிலும் இதே நிலைதான் அவர்களும் இதை வாங்க மறுக்கின்றனர். பொதுமக்களுக்கும் போதிய விழிப்புணர்வு இல்லை. வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் நாணயங்கள் செல்லும் என்று தகவல் பரப்பப்படுகிறது.

எனினும் மக்களிடையே அது சென்றடைவதில்லை. மொத்த வியாபாரிகளான எங்களிடம் ஓட்டல்கள், ஜவுளி கடைகள் நடத்தும் சிறு வியாபாரிகள் 10 ரூபாய் நோட்டுகளை மொத்தமாக வாங்கி செல்கின்றனர்.

பொதுமக்களுக்கு 10 ரூபாய் நாணயங்கள் கொடுத்தால் அவர்கள் வாங்குவதில்லை. அதற்காகத்தான் 10 ரூபாய் நோட்டுகளை உங்களிடம் வாங்க வருகிறோம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பத்து ரூபாய் நாணயங்கள் செல்லத்தக்கது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிட வேண்டும். மேலும் அறிவிப்பு குறித்தும் பொது மக்களுக்கு தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அவ்வாறு ஏற்படுத்தப்பட்டால் மட்டுமே இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசு பஸ்கள்

பொதுமக்கள் கூறுகையில், 10 ரூபாய் நாணயங்கள் வணிக நிறுவனங்களில் வாங்க மறுக்கிறார்கள். எனவே நாங்கள் நாணயத்தை பெற மறுக்கிறோம்.

முதலில் வணிகர்கள் நாணயத்தை வாங்கட்டும். பின்னர் நாங்கள் வாங்குகிறோம். அவர்கள் வாங்காததால் எங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் 10 ரூபாய் நாணயங்களை உண்டியலில் சேர்க்கின்றனர்.

குறிப்பாக அரசு பஸ்களில் கூட கண்டக்டர்கள் இந்த நாணயங்களை வாங்குவதில்லை. அவர்களுக்கும் முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வங்கிகளில் கூட இந்த நாணயத்தை பெற்றுக் கொள்ள தயக்கம் காட்டுகின்றனர் என்றனர்.

வதந்தி

வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த நேசகுமார் கூறுகையில், சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் 10 ரூபாய் நாணயங்களை கடைக்காரர்கள், ஆட்டோக்காரர்கள் உள்பட அனைவரும் வாங்குகிறார்கள்.

ஆனால் வேலூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். இதற்கு காரணம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போலியான 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன என்று ஒரு வதந்தி பரவின.

அதனால் டீக்கடைகள், மளிகைக்கடைகள், ஆட்டோக்கள், பஸ்களில் இந்த நாணயங்களை வாங்க மறுத்து விட்டனர். அதேபோன்று பொதுமக்களிடம் யாராவது இதனை கொடுத்தாலும் 10 ரூபாய் நாணயங்களை யாரும் வாங்குவதில்லை என்று வாங்க மறுத்தனர்.

அதன்காரணமாக வேலூர் மாவட்டத்தில் தற்போதும் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற எண்ணம் தான் பொதுமக்களிடம் உள்ளது.

இதனை தவிர்க்க அரசு, தனியார் வங்கிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்