நெல்லை அருகே பயங்கரம்: அண்ணன்-தம்பி கொடூரக்கொலை பணத்தகராறில் 2 பேர் வெறிச்செயல்
நெல்லை அருகே, அண்ணன்-தம்பி கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அவர்களை பணத்தகராறில் தீர்த்து கட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை,
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காமராஜர்புரத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 58). பேரூராட்சி தூய்மை பணியாளர். இவருடைய முதல் மனைவி பாண்டியம்மாள். இவர்களுடைய மகன் மணிகண்டன் (25), மகள் பிரியதர்ஷனி (23).
பாண்டியம்மாள் 20 வருடங்களுக்கு முன்பு இறந்ததையடுத்து, 2-வதாக முருகேஸ்வரி (33) என்ற பெண்ணை நாகராஜ் திருமணம் செய்தார். இவர்களுடைய மகன் சபரீஸ்வரன் (13).
வெங்காயம் விற்பனை
மணிகண்டன் நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி விலக்கு பகுதியில் சரக்கு ஆட்டோவில் வெங்காயம் விற்பனை செய்து வந்தார்.
மணிகண்டனுக்கு உதவியாக தம்பி சபரீஸ்வரனும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். அவர்கள் 2 பேரும் இரவு நேரத்தில் சுத்தமல்லியில் உள்ள பெட்ரோல் பங்கில் சரக்கு ஆட்டோவை நிறுத்திவிட்டு அந்த பகுதியில் தங்கி இருப்பார்கள்.
மணிகண்டன், சபரீஸ்வரன் இருவரும் தினமும் தந்தை நாகராஜிடம் போனில் பேசுவார்கள். கடந்த 9-ந் தேதிக்கு பிறகு மணிகண்டனிடம் இருந்து தந்தைக்கு போன் அழைப்பு இல்லை. இதையடுத்து நாகராஜ், மணிகண்டன் செல்போனுக்கு தொடர்புகொண்டபோது, அது 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. அங்கு வெங்காயம் வியாபாரம் செய்யும் உறவினர்கள் மூலம் தேடிப்பார்த்தும் இருவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த நாகராஜ் நெல்லை வந்து சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
கொடூரக்கொலை
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில், சுத்தமல்லியை அடுத்த ராஜீவ்நகரை சேர்ந்த சுப்பையா மகன்கள் சதீஷ்குமார் (23), பார்த்தீபன் (22) ஆகிய இருவரும் மணிகண்டன், சபரீஸ்வரனை அடுத்தடுத்து அழைத்து சென்றது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரித்தபோது, 2 பேரும் சேர்ந்து மணிகண்டனையும், சபரீஸ்வரனையும் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்து, உடல்களை ஓரிடத்தில் மறைத்து வைத்திருந்த அதிர்ச்சி தகவலை கூறினர்.
மேலும், அவர்கள் அளித்த தகவலின்பேரில், கொண்டாநகரம் ரெயில்வே கேட் அருகே பாழடைந்த கட்டிடத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 2 பேரின் உடல்களையும் மீட்டனர். இதில் சபரீஸ்வரன் உடலை நாய்கள் கடித்து குதறியிருந்தன.
காரணம் என்ன?
பின்னர் போலீசார் பயங்கர கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
மணிகண்டன், சதீஷ்குமாரிடம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கினார். அதை திரும்ப கேட்டபோது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உருவானது. மேலும் சதீஷ்குமார் மீது பேட்டை போலீஸ் நிலையத்தில் கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கு மணிகண்டன் தான் காரணம் என சதீஷ்குமார் எண்ணினார்.
இந்தநிலையில் சதீஷ்குமார், பார்த்தீபன் தரப்பினர் மணிகண்டனை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினார்கள். அதன்படி மணிகண்டனை, சதீஷ்குமார் மதுகுடிக்க வருமாறு அழைத்துள்ளார் அதை நம்பி வந்த மணிகண்டனை நன்றாக மதுகுடிக்க வைத்து போதை ஏறியதும், அவரது கை, கால்களை கட்டிப்போட்டு கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.
அண்ணனை அழைத்து வந்த விவரம் தம்பிக்கு தெரியும் என்பதால் அவரையும் தீர்த்து கட்ட முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து சபரீஸ்வரன் தங்கி இருந்த பகுதிக்கு சென்று, அவரை மணிகண்டன் அழைத்து வரச் சொன்னதாக கூறி, அதேஇடத்திற்கு கூட்டிச்சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.
2 பேர் கைது
பின்னர் 2 பேரது உடல்களையும் தார்ப்பாய் போட்டு மூடி, அதன்மீது செங்கல்களை வைத்து மறைத்தனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து சதீஷ்குமார், பார்த்தீபன் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.