ஆணையாளர் அறை முன்பு தர்ணாவில் ஈடுபட்ட என்ஜினீயர் பணியிடை நீக்கம்

ஆணையாளர் அறை முன்பு தர்ணாவில் ஈடுபட்ட என்ஜினீயர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்

Update: 2023-06-05 18:45 GMT

காரைக்குடி

காரைக்குடி நகராட்சியில் என்ஜினீயராக பணியாற்றி வந்தவர் கோவிந்தராஜன். இவர் தற்போது தேவகோட்டை நகராட்சியிலும் கூடுதல் பொறுப்பில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கு கடந்த மே மாதத்திற்கான சம்பளம் முழுவதும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் தனது சம்பளம் முழுவதையும் வழங்கக்கோரி என்ஜினீயர் கோவிந்தராஜன் நகராட்சி ஆணையாளர் அறை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்தரப்பில் கூறுகையில், கோவிந்தராஜன் சில நாட்கள் பணிக்கு வரவில்லை. விடுமுறைக்கான அனுமதியும் பெறவில்லை. அவர் பணியாற்றியதற்கான ஆவணப்பதிவுகள் ஏதுமில்லை என்றனர்.

நகராட்சி என்ஜினீயர் கோவிந்தராஜன் கூறுகையில், பாதி நாட்களுக்கு மேல் வருகை பதிவேடு ஆணையாளர் அறையில் வைக்கப்பட்டிருந்ததால் பதிவேட்டில் கையெழுத்து இட முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனாலும் ஆன்லைன் பதிவுகளில் வருகையினை பதிவு செய்துள்ளேன். காழ்ப்புணர்ச்சி காரணமாக எனக்கு அநீதி இழைக்கப்படுகிறது.. இதனால் பொருளாதார சிக்கலில் எனது குடும்ப சூழல் உள்ளது. எனது முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என கூறினார். பின்னர் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை என்ஜினீயரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் போராட்டத்தினை கைவிட்டார். இதுகுறித்து ஆணையாளர் வீர முத்துக்குமார், நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனரிடம் புகார் செய்தார். அவரது விசாரணை அறிக்கைக்கு பின் நகராட்சி நிர்வாக இயக்குனர் காரைக்குடி நகராட்சி என்ஜினீயர் கோவிந்தராஜனை ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் பணியிடை நீக்கம் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்