பவானி கூடுதுறையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடினர் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
பக்தர்கள் புனிதநீராடினர்
ஆடி அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினார்கள். அவர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
பவானி கூடுதுறை
முக்கிய புண்ணிய தலங்களில் ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையும் ஒன்றாகும். அங்கு காவிரி ஆறு, பவானி ஆறு, கண்களுக்கு புலப்படாத அமுத நதி ஆகிய 3 ஆறுகளும் சங்கமிக்கும் தலமாக விளங்குகிறது. பரிகார தலமாக விளங்குவதால் பவானி கூடுதுறைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதனால் அங்கு எப்போதும் பக்தர்கள் கூட்டம் காணப்படும். கூடுதுறையில் பரிகார பூஜைகள் செய்து புனிதநீராடிவிட்டு, சங்கமேஸ்வரரை பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.
அமாவாசை தினங்களில் பவானி கூடுதுறைக்கு பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். குறிப்பாக தமிழ் மாதங்களில் தை, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் மகாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதனால் மகாளய அமாவாசையின்போது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பக்தர்கள் புண்ணிய தலங்களுக்கு செல்வார்கள்.
திதி, தர்ப்பணம்
இந்தநிலையில் ஆடி அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் நேற்று அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் திரண்டனர். கூடுதுறையில் உள்ள பரிகார மண்டபங்களில் புரோகிதர்கள் திதி, தர்ப்பணம் செய்வதற்காக தயாராக இருந்தனர். கூடுதுறைக்கு வந்த பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தனர். அப்போது தங்களது முன்னோர்களை நினைத்து திதி கொடுக்கும் பக்தர்கள் கூடுதுறையில் தண்ணீரில் இறங்கி பிண்டங்களை விட்டனர். பிறகு கூடுதுறையில் புனிதநீராடிவிட்டு கோவிலுக்கு சென்று சங்கமேஸ்வரரை தரிசனம் செய்தனர்.
அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், கரூர், சேலம், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்தார்கள். இதனால் நேரம் செல்லச்செல்ல பக்தர்களின் கூட்டம் அதிகமாகி கொண்டே இருந்தது. கூடுதுறையில் பரிகார மண்டபங்களில் பக்தர்களின் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் பக்தர்களின் தலைகளாகவே தெரிந்தது.
பக்தர்கள் புனிதநீராடினர்
காவிரி ஆற்றில் ஏற்கனவே தண்ணீர் அதிகமாக வந்து கொண்டு இருந்தது. ஈரோடு மாவட்டத்தில் நள்ளிரவில் பெய்த கனமழையால் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும் பவானி கூடுதுறையில் தண்ணீர் அதிகமாக சென்றது. இதனால் பக்தர்கள் பாதுகாப்பாக குளிக்க வேண்டும் என்று போலீசார் தொடர்ந்து ஒலி பெருக்கி மூலமாக அறிவித்து கொண்டே இருந்தனர். மேலும், ஆண்களும், பெண்களும் புனித நீராடுவதற்கு தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. அங்கு போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்கள்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மகாளய அமாவாசையின்போது பக்தர்கள் புனித நீராடுவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால், பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுதுறைக்கு வந்து புனிதநீராடினார்கள்.
21 தலைமுறைகள்
இதுகுறித்து கோவை கணபதி பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் (வயது 39) என்பவர் கூறியதாவது:-
நான் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறேன். எனது தாத்தா கந்தசாமி கடந்த 33 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ஆனால் நாங்கள் திதி, தர்ப்பணம் கொடுத்ததில்லை. இந்தநிலையில் பவானி கூடுதுறையில் மகாளய அமாவாசை தினத்தில் சென்று திதி கொடுத்தால் சிறந்த பலன் கிடைக்கும் என்று பெரியவர்கள் கூறினார்கள். இதனால் பவானி கூடுதுறைக்கு குடும்பத்துடன் வந்தோம். ஆனால் எதிர்பார்த்ததை விட அதிகமான கூட்டம் இருந்தது. புரோகிதர் மூலமாக எனது தாத்தாவுக்கு திதி கொடுத்துவிட்டு கூடுதுறையில் புனித நீராடினோம். கூட்டம் அதிகமாக இருந்தாலும், தண்ணீர் அதிகமாக செல்வதால் நீராட சவுகரியமாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
புரோகிதர் கலையரசன் கூறுகையில், "ஆடி, புரட்டாசி, தை ஆகிய மாதங்களில் மகாளய அமாவாசையில் பித்ருக்களின் ஆன்மா கீழே வந்து செல்வதாக ஐதீகம். இதனால் அவர்களின் பசி தீர்ப்பதற்காக திதியும், தர்ப்பணமும் கொடுப்பது வழக்கம். 21 தலைமுறைக்கும் சேர்த்து திதி கொடுப்பதற்காக 7 பிண்டங்கள் வைத்து திதி கொடுக்கப்படுகிறது. மாதந்தோறும் வரும் அமாவாசையின்போது பக்தர்கள் பலர் தங்களது முன்னோர்களுக்கு எள் நீர் விட்டு தர்ப்பணம் செய்கிறார்கள். ஆண்டுக்கு ஒருமுறை மகாளய அமாவாசையின்போது திதி கொடுக்கிறார்கள்", என்றார்.
கருங்கல்பாளையம்
இதேபோல் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரையிலும் ஏராளமான பக்தர்கள் திதி, தர்ப்பணம் கொடுத்தனர். இதையொட்டி காவிரிக்கரையில் பக்தர்களை புரோகிதர்கள் வரிசையாக அமர வைத்து திதி கொடுக்க செய்தனர். தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்த பக்தர்கள் காவிரி ஆற்றில் பிண்டங்களை கரைத்து புனித நீராடினார்கள். இதையொட்டி காவிரிக்கரையில் கருங்கல்பாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.