ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீராடினர்

ஆடி அமாவாசையையொட்டி நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினா். நீண்ட வரிசையில் காத்திருந்து கோவிலில் தரிசனம் செய்தனர்.

Update: 2023-08-16 18:45 GMT

ராமேசுவரம், 

ஆடி அமாவாசையையொட்டி நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினா். நீண்ட வரிசையில் காத்திருந்து கோவிலில் தரிசனம் செய்தனர்.

அக்னி தீர்த்த கடல்

இந்தியாவில் உள்ள முக்கிய புண்ணிய தலங்களில் ஒன்றாக ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் விளங்கி வருகிறது.

முன்னோர் ஆத்மா சாந்தி அடைய வேண்டி ராமேசுவரம் வரும் பக்தர்கள், அக்னிதீர்த்த கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து திதி, தர்ப்பண பூஜை செய்து வழிபாடு செய்து, அதன் பின்னர் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வார்கள். அவ்வாறு திதி, தர்ப்பணம் செய்து வழிபட ஆடி, தை மாத அமாவாசை நாட்கள், புரட்டாசி மகாளய அமாவாசை நாள் உகந்ததாகும். இதுதவிர மாதாந்திர அமாவாசை நாட்களிலும் கூட்டம் அதிகம் இருக்கும்.

நேற்று ஆடி அமாவாசை என்பதால் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட அதிகாலையில் இருந்தே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

தீர்த்த கிணறுகளில் நீராடல்

கடலில் நீராடிய பின்னர் கடற்கரையில் அமர்ந்து, தங்களது முன்னோர் நினைவாக புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம், சங்கல்ப பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.

தொடர்ந்து ராமநாதசுவாமி கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராடினர். அங்கும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், கோவிலின் வடக்கு கோபுர வாசல் பகுதியில் இருந்து கிழக்கு ரதவீதி சாலை வரையிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து தீர்த்த கிணறுகளில் புனித நீராடினர்.

கோவிலில் தரிசனத்துக்காக முதல் பிரகாரத்தில் இருந்து 3-ம் பிரகாரம் கிழக்கு வாசல் மற்றும் கிழக்கு ரதவீதி சாலை, தெற்கு கோபுர வாசல் வரையிலும் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். பல மணி நேர காத்திருப்புக்கு பின்னர் தரிசனம் செய்தனர்.

போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க ராமேசுவரம் நகருக்குள் நேற்று அரசு பஸ்கள், தவிர மற்ற வாகனங்கள் எதுவும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை உத்தரவின் பேரில் நேற்று ஏராளமான போலீசார் ராமேசுவரத்தில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

2-வது அமாவாசை

சில ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆடி மாதத்தில் 2 அமாவாசை தினங்கள் வரும். இந்த ஆண்டும் அந்த சிறப்பு வந்தது. நேற்று ஆடி மாதத்தின் 2-வது அமாவாசை என்பதால், நேற்றைய தினம் புனித நீராடியது நல்ல பலன்களை கொடுக்கும் என பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்