அரவூர் கார்கோடகேஸ்வரர் கோவிலில் ரூ.80 லட்சத்தில் திருப்பணி
நீடாமங்கலம் அருகே அரவூர் கார்கோடகேஸ்வரர் கோவிலில் ரூ.80 லட்சத்தில் திருப்பணிகள் 80 ஆண்டுகளுக்குப்பிறகு நடக்கிறது.
நீடாமங்கலம் அருகே அரவூர் கார்கோடகேஸ்வரர் கோவிலில் ரூ.80 லட்சத்தில் திருப்பணிகள் 80 ஆண்டுகளுக்குப்பிறகு நடக்கிறது.
கார்கோடகேஸ்வரர்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து அடவங்குடி செல்லும் வழியில் 4 கிலோ மீட்டர் தூரத்தில் அரவூர் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள கார்கோடகேஸ்வரர், மங்களாம்பிகை அம்மன் கோவில் பழமையான சிவன் தலமாகும். இக்கோவில் கார்கோடகன் வழிபட்ட தலமாகும்.
கார்கோடகன் வழிபட்ட சிவனை வழிபட்டால் இழந்த அனைத்து ஐஸ்வர்யங்களையும் மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம். கார்கோடகன் என்பது பாம்புகளில் ஒரு வகை. இந்த பிரபஞ்சத்தை 8 திசைகளிலும் 8 நாகங்கள் பாதுகாக்கின்றன. அதில் கார்கோடகன், நிருதி பாகம் என்கிற தென் மேற்கு பாகத்தை பாதுகாக்கிறது.
சிவனை வழிபட்ட கார்கோடகன்
மேலும் கிழக்கு திசையை அனந்தன், மேற்கு திசையை சங்கபாலன், வடக்கு திசையை பத்மன், தெற்கு திசையை தக்சன், தென்கிழக்கு திசையை வாசுகி, வடகிழக்கு திசையை மகாபத்மன், வடமேற்கு திசையை குளிகன் ஆகிய பாம்புகள் பாதுகாக்கின்றன. அதில் கார்கோடகன் பாம்பு மிகவும் சக்தி வாய்ந்தது.
புராண காலத்தில் பரிஷத் மகாராஜா பாம்பு கடித்து மரணம் அடைந்தார். இதையடுத்து அவருடைய மகன் ஜனமேஜெயன் சர்ப்ப சத்திர யாகம் நடத்தினார். அந்த யாக குண்டத்தில் அனைத்து பாம்பு இனங்களும் விழுந்து உயிர் நீத்ததாகவும், கார்கோடகன் மட்டும் சிவனை வழிபட்டு தன்னை காத்து கொண்டதாகவும் புராண வரலாறு கூறுகிறது.
சனி தோஷம் நீங்கும்
அத்தகைய கார்கோடகன், அரவூரில் சிவனை வழிபட்டதால் இக்கோவில் கார்கோடகேஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. அரவம் என்றால் பாம்பு என்று பொருள்படும். இன்று வரை இந்த ஊரில் பாம்பு தீண்டி யாரும் பாதிக்கப்பட்டது கிடையாது என கூறுகிறார்கள். நளமகாராஜா பெற்ற சாபத்தால் சனீஸ்வரனால் பிடிக்கப்படும்போது கார்கோடக பாம்பு தீண்டி தான் உருவ மாற்றம் அடைந்தார். மீண்டும் சனி தோஷம் விலகும்போது அவர் கார்கோடகனால் சாபம் நீங்கப்பெற்றார். அந்த வகையில் கார்கோடகனை வழிபட்டால் சனி தோஷம் நீங்குவதோடு அனைத்து விதமான ஐஸ்வர்யங்களையும் பெறலாம் என்பது நம்பிக்கை.
இத்தகைய சிறப்பு வாய்ந்த அரவூர் கார்கோடகேஸ்வரர் கோவிலில் 80 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் நடத்தி, குடமுழுக்கு செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி தற்போது அரவூரில் கார்கோடகேஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரவூர் கிராமமக்கள் செய்துள்ளனர்.