சாலைப்பணியை தடுத்து நிறுத்தும் கோவில் அதிகாரி

திருமுருகன்பூண்டி நகராட்சியில் சாலைப்பணியை கோவில் செயல் அதிகாரி தடுப்பதாக கூறி கவுன்சிலர்கள், அனைத்துக்கட்சியினர் கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.

Update: 2023-08-28 18:51 GMT

திருமுருகன்பூண்டி நகராட்சியில் சாலைப்பணியை கோவில் செயல் அதிகாரி தடுப்பதாக கூறி கவுன்சிலர்கள், அனைத்துக்கட்சியினர் கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.

கழிவுநீர் கால்வாய் பணி

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திருமுருகன்பூண்டி நகராட்சி கவுன்சிலர்கள் ராஜன், முருகசாமி, நடராஜ், யுவராஜ், தனலட்சுமி, சுப்பிரமணியன் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் கோவில் அருகில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் பொது நூலகம் உள்ளது. இந்த சாலையை ஒட்டி, பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அடிப்படை தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி நகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு, பாதி வேலை முடியும் நிலையில் கோவில் செயல் அதிகாரி வந்து கால்வாய் கட்டும் இடம் கோவிலுக்கு சொந்தமானது என தடுத்து நிறுத்தினார். ஏற்கனவே கோவிலுக்கு சொந்தமான இடம் முழுவதும் வேலி அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. கால்வாய் கட்டும் பணி அந்த இடத்துக்கு வெளிப்புறமாக நடைபெற்றது.

கழிவுநீர் வெளியேற ஏற்பாடு

பணி நிறுத்தப்பட்டவுடன் செயல் அதிகாரி அந்த இடத்தை பொக்லைன் எந்திரம் மூலம் மூடினார். இதனால் குடிநீர் குழாய்கள் முழுவதும் உடைந்து, குடியிருப்பு மற்றும் பள்ளிக்கு செல்ல வேண்டிய குடிநீர் தடைபட்டது. இதை தட்டிக்கேட்ட அப்பகுதி மக்களை செயல் அதிகாரி, அவருடைய கணவர் தாக்க முயற்சி செய்தனர். அதன்பிறகு காவல்துறையினர் தலையிட்டு நிலைமையை சரி செய்தனர்.

சாலைப்பணியை தடுத்து நிறுத்த முயலும் செயல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீர் கால்வாயை ஏற்கனவே உள்ள பொதுகழிப்பிடத்துக்கு செல்லும் கால்வாயுடன் இணைத்து கழிவுநீர் வெளியேற ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த பிரச்சினை குறித்து சமூகவலைதளத்தில் தவறான செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்