சிறுத்தொண்டநல்லூரில் கோவில் கொடை விழா:முத்துமாலை அம்மன் கற்பக பொன்சப்பரத்தில் பவனி
சிறுத்தொண்டநல்லூரில் கோவில் கொடை விழாவில் முத்துமாலை அம்மன் கற்பக பொன்சப்பரத்தில் பவனி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஏரல்:
சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோவில் கொடைவிழாவில் கற்பக பொன்சப்பரத்தில் அம்மன் பவனி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
முத்துமாலை அம்மன் கோவில் கொடை
ஏரல் அருகே உள்ள சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோவிலில் கடந்த 27-ந் தேதி கொடைவிழா தொடங்கியது. அன்று இரவு 8 மணிக்கு அம்மன் மஞ்சள் காப்பு தரிசனம், இரவு 9 மணிக்கு வில்லிசை நடந்தது. முக்கிய நிகழ்வான கோவில் கொடை நேற்று முன்தினம் நடந்தது. இதை முன்னிட்டு பகல் 12 மணிக்கு அம்மன் சந்தன காப்பு தரிசனம், சிறப்பு பூஜை, மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு வில்லிசை, இரவு 11 மணிக்கு முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல், கயிறு சுற்றி ஆடுதல், நள்ளிரவு புஷ்ப அலங்கார தரிசனம், சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.
கற்பக பொன்சப்பரத்தில் பவனி
அதனைத் தொடர்ந்து மத்தாப்பு வான வேடிக்கை, மேளதாளங்களுடன் கற்பகப் பொன் சப்பரத்தில் அம்மன் பவனி நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக நடந்த இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். கொடை விழாவையொட்டி காலை, மதியம், இரவு அன்னதானம் நடைபெற்றது. நேற்று காலையில் உலா சென்ற அம்மன் கோவில் வந்து ேசர்தல் நடைபெற்றது. காலை 9 மணிக்கு பக்தர்கள் அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை, தீபாரதனை நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.