மகா சிவராத்திரி, சனி பிரதோஷம் இணைந்து வந்ததால் அலைமோதிய பக்தர்கள்
மகா சிவராத்திரி நாளில் சனிபிரதோஷம் வந்ததையொட்டி தஞ்சை பெரியகோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
தஞ்சாவூர்;
மகா சிவராத்திரி நாளில் சனிபிரதோஷம் வந்ததையொட்டி தஞ்சை பெரியகோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
தஞ்சை பெரியகோவில்
தஞ்சை பெரியகோவில் யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னம் என்ற அங்கீகாரத்துடன் நிமிர்ந்து நிற்கிறது. தமிழ் கலாசாரத்தின் கவுரவ சின்னமாக திகழும் தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகிஅம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, முருகன், சண்டிகேஸ்வரர், கருவூரார், நடராஜர் ஆகிய சன்னதிகள் உள்ளன. மேலும் நந்தியெம்பெருமானுக்கு பெரிய சிலையும் உள்ளது.
மகாசிவராத்திரி
மகா சிவராத்திரி நாளில் சனி பிரதோஷமும் இணைந்து வந்ததால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சோமவார நாளான திங்கள்கிழமையிலும், சனிக்கிழமையிலும் வரும் பிரதோஷம் மிகவும் வலிமையும், வளம் அருளும் பிரதோஷமாக விளங்குவதாக வழக்கத்தைவிட நேற்று அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொண்டனர். சனிப்பிரதோஷமும் மகா சிவராத்திரியும் இணைந்தநாளில், நமசிவாய மந்திரத்தையும், பதிகங்களையும் பாராயணம் செய்து, பிரதோஷ பூஜையிலும், இரவு மகா சிவராத்திரி பூஜைகளிலும் கலந்துக்கொண்டால், பிறவி பலன்கள் கிடைக்கப் பெறலாம் என சிவாச்சாரியார் தெரிவிக்கின்றனர்.
நந்திக்கு அபிஷேகம்
இதைத்தொடர்ந்து தஞ்சாவூர் பெரியகோவிலில் நேற்று மாலை நடந்த பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு பால், மஞ்சள், சந்தனம், திரவியப்பொடி, விபூதி உள்ளிட்ட மங்கள பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்து, தீபாரதனை காண்பிக்கப்பட்டது.இதில், ஏராளாமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரினசம் செய்தனர்.