திருமூர்த்திமலையில் ஆடிப்பெருக்கு விழா நடத்தப்படுமா?

திருமூர்த்திமலையில் வருகிற 3-ந்தேதி ஆடிப்பெருக்கு விழா நடத்தப்படுமா? என பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Update: 2023-07-20 12:30 GMT

திருமூர்த்திமலையில் வருகிற 3-ந்தேதி ஆடிப்பெருக்கு விழா நடத்தப்படுமா? என பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அமணலிங்கேஸ்வரர் கோவில்

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒரே குன்றில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

கோவிலின் அடிவாரத்தில் இருந்து சற்று உயரத்தில் அடர்ந்த வனப் பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. கோவிலுக்கு செல்லும் வழியில் திருமூர்த்தி அணை, சிறுவர் பூங்கா, நீச்சல் குளம், படகு இல்லம், வண்ண மீன்காட்சியகம் ஆகிய பொழுதுபோக்கு அம்சங்களும் அமைந்துள்ளது.

ஆடிப்பெருக்கு

இதன் காரணமாக திருமூர்த்தி மலைப்பகுதியில் சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஆடிப்பெருக்கு விழாவை நடத்துவதற்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலா துறை இணைந்து நடவடிக்கை எடுத்தது.

அதைத்தொடர்ந்து கடந்த 2013 -ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் வருகின்ற ஆடிப்பெருக்கு தினத்தன்று திருமூர்த்தி அணைக்கு அருகே உள்ள பகுதியில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வந்தது.

தனித்தனியாக அரங்குகள்

அப்போது வனம், வருவாய், தோட்டக்கலை, சமூகநலம், பொதுப்பணி, சுற்றுலா, சுகாதாரம், போக்குவரத்து, பட்டு வளர்ச்சி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, கால்நடை பராமரிப்பு, குழந்தைகள் வளர்ச்சி, வேளாண்மை துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படுகின்ற திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக அதற்கான தனித்தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கும்.

அதன் மூலம் அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களை எளிதில் சென்றடைந்தது. அதுமட்டுமின்றி தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம், வால் சண்டை, மான் கொம்பு உள்ளிட்ட தற்காப்பு கலைகளும், பரதம், யோகாசனம், கிராமிய பாடல்கள், கரகாட்டம் போன்றவற்றையும் வீரர், வீராங்கனைகள் விழாவில் தத்துவமாக செய்து காட்டுவார்கள். ஆடிப்பெருக்கு விழா கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை பார்வையிடுவதற்கு பொதுமக்களும் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு பயனாளிகளும் வருகை தருவார்கள்.

2 ஆண்டுகளாக நடத்தவில்லை

ஆனால் ஆண்டுதோறும் நடைபெற்று வந்த ஆடிப்பெருக்கு விழா பல்வேறு நிர்வாக காரணங்களால் கடந்த 2019 -ம் ஆண்டில் இருந்து நடத்தப்படவில்லை. அதை தொடர்ந்து கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக நடத்தாத நிலையில் கடந்த ஆண்டும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த சூழலில் வருகிற ஆகஸ்டு 3-ந்தேதி ஆடிப்பெருக்கு வரவுள்ளது. இதனால் திருமூர்த்தி மலையில் அரசு சார்பில் ஆடிப்பெருக்கு விழா நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்