பர்கூர்
பர்கூர் ஒன்றியம் காரகுப்பம் ஊராட்சி கொல்லப்பள்ளி இருளர் காலனி அருகில் பெரிய மலை என்னும் வனத்தில் உள்ள வன தேவதையம்மன், வனமுனி அய்யனார் கோவில் திருவிழா கடந்த மாதம் 19-ந்தேதி கங்கனம் கட்டுதல், மாலை அணிவித்தல், கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அன்று வனதேவதை அம்மனையும், வனமுனி அய்யனாரையும் சம்பந்தி சின்னு பூசாரியிடம் ஒப்படைத்து, கொல்லப்பள்ளி சம்பந்தி வீட்டில் இருளர் இனமக்கள் தங்கினர். அன்று முதல் தந்துசன்கொல்லை, காரகுப்பம் இருளர் காலனி, பூமாலை நகர் இருளர் காலனி, கொத்தப்பள்ளி, பழனிஆண்டவர், மேல்பிஞ்சு, புதுகுளம் கோணமலை, போச்சம்பள்ளி வந்து சேர்ந்த பின்னர் ஏ.மோட்டூர் இருளர் காலனி, எம்.ஜி.ஆர்., நகர் இருளர் காலனி, ஐகுந்தம் வழியாக பெரியமலை அருகில் உள்ள கொல்லப்பள்ளி இருளர் காலனிக்கு வந்தடைந்தனர். 2-ந்தேதி வனத்திற்கு சென்று தேன், கிழங்கு, பூக்கள் சேகரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் வனதேவதை அம்மன், வனமுனி அய்யனாருக்கு சீர்வரிசை சம்பந்தி வீட்டாரிடம் ஒப்படைத்தல், இருளர் குட்டையில் இருகரகங்கள் தலை கூடுதல் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் பச்சை ஆடை உடுத்தி, ஆடு பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் கோவில் பூசாரி ஆட்டை கடித்தும், ரத்தம் குடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார். நேற்று காலை இரு கரகமும் கங்கையில் விடும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.