மரப்பெட்டியில் அம்மனை சுமந்து வரும் வினோத திருவிழா

திருவாரூர் அருகே வடகட்டளை கிராமத்தில் மரப்பெட்டியில் அம்மனை சுமந்து வரும் வினோத திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-06-26 16:02 GMT

திருவாரூர் அருகே வடகட்டளை கிராமத்தில் மரப்பெட்டியில் அம்மனை சுமந்து வரும் வினோத திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோபித்துக்கொண்டு சென்ற அம்மன்

திருவாரூர் அருகே வடகட்டளை கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அம்மனுக்கு உரல், உலக்கை சத்தம் பிடிக்காத காரணத்தினால் கோபித்துக்கொண்டு வடபாதிமங்கலம் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அம்மன் சென்றுவிட்டதாக ஐதீகம்.

ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விழாவில் வடபாதிமங்கலம் அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து ஐம்பொன்னாலான 1½ அடி உயரம் கொண்ட மாரியம்மன் சிலையை மரப்பெட்டியில் வைத்து கிராம மக்கள் தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வடகட்டளை கோவிலுக்கு கொண்டு வருகிறார்கள். இந்த வினோத திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

சீர்வரிசை

புனவாசல் கிராம மக்கள் இந்த அம்மனை தலையில் சுமந்து கோவிலுக்கு எடுத்து வருகிறார்கள். வட கட்டளை மாரியம்மனின் பிறந்த ஊர் புனவாசல் என்று கருதப்படுவதால் அந்த கிராம மக்கள் சீர்வரிசை அளிப்பதும் வழக்கமாக உள்ளது. ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு ஒரு மாதம் தாமதமாக தற்போது விழா நடந்து வருகிறது.

திரளான பக்தர்கள்

நேற்று அம்மனை மரப்பெட்டியில் சுமந்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விநோதமான திருவிழாவை காண பல்வேறு கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்