சந்திர கிரகணத்தையொட்டி மாவட்டத்தில் கோவில்களில் நடை அடைக்கப்பட்டது

Update: 2022-11-08 18:45 GMT

கிருஷ்ணகிரி:

முழு சந்திர கிரகணத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோவில்களில் நடை அடைக்கப்பட்டது.

சந்திர கிரகணம்

இந்தியாவில் சந்திர கிரகண நிகழ்வு நேற்று மதியம் 2.39 மணியில் இருந்து மாலை 6.29 வரையில் இருந்தது. சூரியன், பூமி, சந்திரன் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்போது பூமியின் நிழல் நிலவின் மீது விழுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

இதை முன்னிட்டு தமிழகத்தில் பெரும்பான்மையான கோவில்களில் நேற்று நடை அடைக்கப்பட்டது. கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில், ராசுவீதி சந்திர மவுலீஸ்வரர் கோவில், காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில், அங்காளம்மன் கோவில், காட்டுநாயனப்பள்ளி முருகன் கோவில், அய்யப்பன் கோவில், நரசிம்ம சாமி கோவில், துர்க்கை அம்மன் கோவில் உள்பட பெரும்பாலான கோவில்களில் நேற்று மதியம் நடை அடைக்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும்

சந்திர கிரகணம் முடிந்த பிறகு கோவில் சுத்தம் செய்யப்பட்டு, பரிகார பூஜைகள் நடைபெற்றன. இதேபோல ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி, ராயக்கோட்டை, பர்கூர், காவேரிப்பட்டணம், ஊத்தங்கரை உள்பட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சந்திர கிரகணத்தையொட்டி நடை அடைக்கப்பட்டது. கிரகணம் முடிந்த பிறகு கோவில்கள் திறக்கப்பட்டு, பரிகார பூஜை செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்