எஸ்.வாழவந்தி மாரியம்மன் கோவில் திருவிழா: தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

Update: 2023-05-01 18:45 GMT

மோகனூர்:

மோகனூர் அருகே எஸ்.வாழவந்தியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி கம்பம் ஊன்றி, காப்புகட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டன. மேலும் பாலப்பட்டியை அடுத்த கொமாரபாளையம் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனித நீர் எடுத்து வந்து, கம்பத்துக்கு ஊற்றி வழிபட்டனர். பின்னர் 24-ந் தேதி முதல் இரவு சாமி திருவீதி உலா நடந்தது. நேற்று அதிகாலை மாவிளக்கு பூஜை நடந்தது. பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்ட குண்டத்தில் இறங்கி, பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிலர் அலகு குத்தியபடியும், குழந்தைகளை கைகளில் ஏந்தியவாறும் தீ மிதித்தனர். முன்னதாக அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடினர். இரவு 12 மணிக்கு முஸ்லீம்களுக்கு சந்தனம் பூசியும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தி, வாண வேடிக்கையும் நடத்தப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) பொங்கல் வைத்தலும், கிடா வெட்டுதலுடம் நடக்கிறது. மாலை தேர் வீதிஉலா செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர். 

மேலும் செய்திகள்