எஸ்.வாழவந்தியில் கோவில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினரிடையே மோதல்-தாசில்தார் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி

Update: 2023-04-15 18:45 GMT

மோகனூர்:

எஸ்.வாழவந்தையில் மாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து தாசில்தார் தலைமையில் நடந்த சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

இரு தரப்பினர் மோதல்

மோகனூர் தாலுகா எஸ்.வாழவந்தியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் 18 கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் சாமியை வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் மோதல் காரணமாக திருவிழா நடத்துவது தடைபட்டது. இதையடுத்து கடந்த 13-ந் தேதி வருவாய்த்துறையினர் இரு தரப்பையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை தோல்வி

இந்தநிலையில் நேற்று மோகனூர் தாலுகா அலுவலகத்தில், மீண்டும் தாசில்தார் சுப்ரமணியம் தலைமையில், நாமக்கல் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் இளையராஜா, ஆய்வாளர் சுந்தர், பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், பாலப்பட்டி வருவாய் ஆய்வாளர் புவனேஸ்வரி, எஸ்.வாழவந்தி கிராம நிர்வாக அலுவலர் கோசலை ஆகியோர் முன்னிலையில் இரு தரப்பினரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஆனால் மீண்டும் சமரசம் ஏற்படாத நிலையில் ஒரு தரப்பை சேர்ந்த பூசாரிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது. மேலும் நாளை (திங்கட்கிழமை) நாமக்கல் உதவி கலெக்டர் தலைமையில் சமாதான கூட்டம் நடத்தப்படும் என்று வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்