கிருஷ்ணகிரி திரவுபதி அம்மன் கோவில் விழாவில்துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

Update: 2023-04-13 18:45 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி திரவுபதி அம்மன் கோவில் விழாவையொட்டி துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.

துரியோதனன் படுகளம்

கிருஷ்ணகிரி பழையபேட்டை தர்மராஜா கோவில் தெருவில், திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் அக்னி வசந்த மகோத்சவ விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான அக்னி வசந்த மகோத்சவ திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

இதில் கிருஷ்ணன் பிறப்பு, பாண்டவர் பிறப்பு, அரக்கு மாளிகை, சுபத்திரா திருமணம் உள்ளிட்ட பல்வேறு மகாபாரத தெருக்கூத்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. நேற்று இந்த விழாவின் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.

வதம் செய்யும் நிகழ்ச்சி

கோவில் முன்பு 30 அடி நீளத்திற்கு துரியோதனன் உருவ பொம்மை மண்ணால் உருவாக்கப்பட்டு, அதில் பீமனும், அர்ச்சுணனும் போரிடும் காட்சிகள் நடத்தப்பட்டு, இறுதியில் அர்ச்சுணன் போர் வாளால் துரியோதனனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

இதனைத் தொடர்ந்து திரவுபதி அம்மனை துரியோதனன் உடல் மீது வைத்து சபதம் நிறைவேறும் வகையில், திரவுபதி கூந்தல் முடிக்கும் நிகழ்வும் நடந்தது. இதை சுற்று வட்டார கிராம மக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். மேலும் திரவுபதி அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.

மேலும் செய்திகள்