தர்மபுரி:
துவாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
துவாதசி வழிபாடு
தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று முன்தினம் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி அந்தந்த கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனைத் தொடர்ந்து நேற்று அனைத்து பெருமாள் கோவில்களிலும் துவாதசியையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் கருட வாகனத்தில் சாமி உற்சவம் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி கோட்டைவரமகாலட்சுமி உடனாகிய பரவாசுதேவ சாமி கோவிலில் துவாதசியையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் கருட வாகன உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ வாரி சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துஇருந்தனர்.
குமாரசாமிப்பேட்டை
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை ஸ்ரீ தேவி பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோவிலில் துவாதசியையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் கருட வாகனத்தில் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதை தொடர்ந்து சாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். உற்சவத்தை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோன்று கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில், சோகத்தூர் திம்மராய பெருமாள் கோவில், பழைய தர்மபுரி வரதகுப்பம்வெங்கட்ரமண சாமி கோவில், செட்டிக்கரை பெருமாள் கோவில், இலக்கியம்பட்டி கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில், மணியம்பாடி வெங்கட்ரமண சாமி கோவில், அதகப்பாடி லட்சுமி நாராயணசாமி கோவில், அலேபுரம் லட்சுமி நரசிம்ம சாமி கோவில் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் துவாதசியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.