பூஜை நடத்துவது தொடர்பாகபெருமாள் கோவிலில் இருதரப்பினர் வாக்குவாதம்போலீசார் பேச்சுவார்த்தை
பென்னாகரம்:
பென்னாகரம் அருகே உள்ள ரங்காபுரம் கிராமத்தில் பல்வேறு சமூகங்களை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பழமைவாய்ந்த ஸ்ரீ சென்றாய வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. தற்போது கோவில் பராமரிப்பின்றியும், பாழடைந்தும் காணப்படுகிறது. மேலும் இந்த கோவில் பள்ளிக்கூட வளாகத்தில் அமைந்துள்ளது. இடவசதி உள்ளிட்ட காரணங்களால் ஒரு சில சமூகத்தை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து பணம் வசூல் செய்து பள்ளிக்கூடம் அருகே உள்ள நிலத்தில் கோவிலை கட்டி முடித்தனர்.
இந்த நிலையில் புரட்டாசி மாத பூஜைக்காக காலம் காலமாக பின்பற்றும் நடைமுறைப்படி ஊர்வலம் எடுத்து செல்ல திட்டமிட்டனர். ஆனால் இது சம்பந்தமாக மற்றொரு தரப்பினர் கூடுதல் இடங்களுக்கு சாமி ஊர்வலம் வர வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பென்னாகரம் போலீஸ் துணை சூப்பிரண்டு மகாலட்சுமி, இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வன் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் அந்த கிராமத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.