கிருஷ்ணகிரி அருகேவீரபத்திரசாமி கோவில் கும்பாபிஷேக விழா தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அடுத்த கீழ்கரடிகுறி ஒண்டியூர் கிராமத்தில் உள்ள வீரபத்திர சாமி கோவில் 7-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் தொடங்கியது. விழாவையொட்டி கங்கை பூஜை, கணபதி பூஜை, வாஸ்து பூஜை, கங்கணம் கட்டுதல், கோ பூஜை, வாஸ்து ஹோமம் மற்றும் தீபாராதனை நடந்தன. தொடர்ந்து முதற்கால யாக பூஜையும், இரவு கோபுர கலச பூஜை, கருட கம்ப பூஜையும் நடந்தன.
நேற்று காலை 2-ம் கால யாக சாலை பூஜை, கணபதி ஹோமம், ருத்ர ஹோமம், சண்டி ஹோமம், கிராம சாந்தி ஹோமம், குருமன்ஸ் குல சாந்தி ஹோமமும்,, சாமிக்கு அபிஷேகம், தீபாராதனை, கலச புறப்பாடு, மகா கும்பாபிஷேகம், விஸ்வரூபன தரிசனம் நடந்தன. தொடர்ந்து பக்தர்களின் தலைமேல் தேங்காய் உடைத்தல், வீரபத்திர சாமிக்கு சிறப்பு பூஜைகள், கரகம் ஆடுதல், மகா தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தன. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.