சேலத்தில் நடந்த தேசிய மகளிர் கூடைப்பந்து போட்டியில் தெலுங்கானா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு பரிசு வழங்கினார்.
கூடைப்பந்து போட்டி
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளையொட்டி தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் சேலம் காந்தி மைதானம் உள்விளையாட்டு அரங்கில் தேசிய மகளிர் கூடைப்பந்து போட்டி கடந்த 4-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதில், தமிழ்நாடு, கேரளா உள்பட 8 மாநில அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
4-வது நாளாக நேற்று காலையில் நடந்த முதல் அரையிறுதி போட்டியில் தெலுங்கானா சவுத் சென்டிரல் ரெயில்வே அணியும், பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழக அணியும் மோதின. முடிவில், 79-41 என்ற செட் கணக்கில் தெலுங்கானா சவுத் சென்டிரல் ரெயில்வே அணி வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து 2-வது அரையிறுதி போட்டியில் கேரளா மின்வாரிய அணியும், கேரளா காவல்துறை அணியும் மோதின. முடிவில், 38-13, 58-32 என்ற செட் கணக்கில் கேரளா மின்வாரிய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் சவுத் சென்டிரல் ரெயில்வே அணியும், கேரளா மின்வாரிய அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இறுதிப்போட்டி
மாலையில் 3-வது இடத்துக்காக நடந்த போட்டியில் பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழக அணியை தோற்கடித்து கேரளா காவல்துறை அணி வெற்றி பெற்றது. அதன்பிறகு இறுதிப்போட்டி தொடங்கியது. இதில், தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி., கலந்து கொண்டு இறுதிப்போட்டியை தொடங்கி வைத்தார்.
தெலுங்கானா சவுத் சென்டிரல் ரெயில்வே அணியும், கேரளா மின்வாரிய அணியும் மோதின. ஆரம்பம் முதலே இரு அணிகளும் சம பலத்தில் இருந்ததால் மாறி மாறி புள்ளிகளை பெற்று வந்தனர். முடிவில், 60-53 என்ற செட் கணக்கில் தெலுங்கானா ரெயில்வே அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
பரிசுகள்
தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. வரவேற்றார். சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கவுதமசிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அமைச்சர் கே.என்.நேரு, தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பைகளை வழங்கினார். சாம்பியன் பட்டம் வென்ற தெலுங்கானா சவுத் சென்டிரல் ரெயில்வே அணிக்கு ரூ.1 லட்சமும், 2-ம் இடம் பெற்ற கேரளா மின்வாரிய அணிக்கு ரூ.75 ஆயிரமும், 3-ம் இடம் பெற்ற கேரளா காவல்துறை அணிக்கு ரூ.45 ஆயிரமும், 4-ம் இடம் பெற்ற பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழக அணிக்கு ரூ.30 ஆயிரமும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், வன்னியர் பொது சொத்துக்கள் பாதுகாப்பு வாரிய உறுப்பினர் எஸ்.ஆர்.அண்ணாமலை, மாநகராட்சி மண்டலக்குழு தலைவர்கள் உமாராணி, கலையமுதன், கவுன்சிலர்கள் ஜெயக்குமார், ராஜ்குமார், கிழக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் சுரேஷ்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜா மற்றும் ராஜ்குமார், பிரபாகரன், தினேஷ், ஜெயக்குமார், விக்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.