மதுபோதையில் காரை எரிக்க முயன்ற வாலிபர்கள்

மதுபோதையில் காரை எரிக்க முயன்ற வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-10 20:16 GMT

காரை எரிக்க முயற்சி

புதுக்கோட்டையில் இருந்து பெரம்பலூர் நோக்கி நேற்று இரவு 2 வாலிபர்கள் ஒரு காரில் சென்று கொண்டு இருந்தனர். திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் அருகே அந்த கார் வந்தபோது, நிலை தடுமாறி சாலையோரம் இருந்த தடுப்பு கட்டையில் மோதியது. இதை கண்ட போக்குவரத்து போலீசார் காரில் வந்த வாலிபர்களிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. மேலும், காரில் டீசல் இல்லாமல் நின்றுவிட்டதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து மதுபோதையில் இருந்ததற்காக போலீசார் வழக்குப்பதிந்தனர். உடனே 2 வாலிபர்களில் ஒருவர் பாட்டிலை எடுத்து சென்று அருகே இருந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தில் டீசல் வாங்கி கொண்டு வந்தார். இதையடுத்து அவர்கள் திடீரென கார் மீது டீசலை ஊற்றி எரிக்க முயன்றனர். உடனே அந்த வாலிபர்களை போலீசார் தடுக்க முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் போலீஸ்காரரையும் தாக்க முயன்றனர்.

தாக்கினர்

இதை கண்ட பொதுமக்கள் 2 பேரையும் பிடித்து சரமாரியாக தாக்கி கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து காரை கிரேன் மூலம் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் அவர்கள் மதுபோதையில் இருந்ததால் அவர்களிடம் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை எழுதி வாங்கிக்கொண்டு, அவர்களை போலீஸ்நிலையம் வரக்கூறிவிட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று இரவு அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இருதரப்பினர் மோதல்

*திருவெறும்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேனீர்பட்டியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி(50). இவரது மகன் இறந்தது தொடர்பாக இவருக்கும், கேசவன்(28), கதிர்வேல்(41) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் நின்ற கேசவன், கதிர்வேலு ஆகியோருக்கும், அங்கு வந்த புண்ணியமூர்த்திக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதுகுறித்து துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கேசவன், கதிர்வேல் ஆகியோரை கைது செய்தனர்.

*மண்ணச்சநல்லூரை அடுத்த பூனாம்பாளையம் சட்டிக்கருப்பு கோவில் அருகே கரட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் மூதாட்டி ஒருவர் பிணமாக கிடந்தார். இதையறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராமன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் பூனாம்பாளையம் மந்தியார் ஓடையைச் சேர்ந்த கமல்ராஜ் மனைவி சந்திரா(62) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 வாகனங்கள் பறிமுதல்

*மணப்பாறை மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியா. நேற்று மணப்பாறை-மதுரை சாலை மற்றும் கோவில்பட்டி சாலைகளில் பள்ளிக்குழந்தைகளை ஏற்றி வந்த 3 வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தார். அதில் இரண்டு வாகனங்களில் காப்பீடு மற்றும் எப்.சி. இல்லாமலும், ஒரு வாகனத்திற்கு எந்தவித ஆவணங்களும் இல்லாத நிலையில், டிரைவர் ஓட்டுனர் உரிமம் கூட இல்லாமல் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து 3 வாகனங்களையும் பறிமுதல் செய்து, ரூ.54 ஆயிரம் அபராதம் விதித்தார்.

*மணப்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று மாலை திடீரென குளிர்ந்த காற்று வீசியதுடன், இரவில் இடி, மின்னலுடன் மழை கொட்டித் தீர்ந்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

*மணிகண்டம் கீழத்தெருவை சேர்ந்த நதியாவின் மகள் கவுசல்யா(15), நேற்று முன்தினம் திடீரென மாயமானார். இது குறித்து மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுசல்யாவை தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்