வாலிபருக்கு கத்திக்குத்து; ஒருவர் கைது
வாலிபரை கத்தியால் குத்திய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள ஆயிப்பாளையம் காலனி தெருவை சேர்ந்தவர் தங்கராசு மகன் செந்தில். இவரது வீட்டில் நடைபெற்ற ஒரு விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி அருகில் உள்ள சிறுகாட்டூர் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை மகன் தீரன்(31) என்பவர் வந்துள்ளார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் தீரன் அவரது ஊருக்கு செல்வதற்காக செந்திலுடன் சேர்ந்து பஸ் நிறுத்தத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது ஆயிப்பாளையம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர் வெளியூர் காரருக்கு இங்கு என்ன வேலை என்று கேட்டுள்ளார். அப்போது குறுக்கிட்ட செந்தில் தனது வீட்டு விசேஷத்திற்கு வந்து விட்டு திரும்பி சென்று கொண்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். அப்போது திடீரென்று அருகில் இருந்த கல்லை எடுத்து தீரனை, ஜெயபிரகாஷ் தாக்கியதில் தலைப்பகுதியில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தில் குத்த வந்தபோது தடுத்ததால் தீரனின் இடது கன்னத்தில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டுள்ளது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த போது தீரனை ஜெயப்பிரகாஷ் கத்தியை காட்டி மிரட்டி சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்த தீரன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து தீரன் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட ஜெயப்பிரகாசை கைது செய்து ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். மேலும் சம்பவத்தில் ஜெயபிரகாஷோடு ஈடுபட்ட மேலும் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.