மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் சாவு
ராணிப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுகா நீலகண்டராயன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 22). இவரது நண்பர் அன்புசெல்வம் (32).
இருவரும் வேலை நிமித்தமாக சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். ராணிப்பேட்டை அருகே வேலம் அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டர்சைக்கிள் திடீரென இவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அன்புசெல்வம் படுகாயம் அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் விரைந்து வந்து தினேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.