கும்மிடிப்பூண்டியில் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி
கும்மிடிப்பூண்டியில் டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு எடுக்கவிடாமல் உறவினர்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.;
வாலிபர் பலி
கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் கோவில் பெரிய ஏரியை ஆழப்படுத்துவதற்காக கடந்த 10 நாட்களுக்கு ஏரியில் இருந்து சவுடு மண் அள்ளப்பட்டு லாரிகள் மூலம் பல பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் இங்கிருந்து சவுடு மண் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் மண் அள்ளப்படும் பகுதியில் தரையில் அமர்ந்து ராக்கப்பாளையம் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் மதன்குமார் (32) என்பவர் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது சவுடு அள்ள வந்த டிப்பர் லாரி ஒன்று எதிர்பாராத விதமாக தரையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த மதன்குமார் மீது ஏறி இறங்கியது. இதில் லாரி முன் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே மதன்குமார் துடிதுடித்து உயிரிழந்தார்.
உறவினர்கள் முற்றுகை
இதுகுறித்த தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்று லாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடத்திற்கு சென்ற கும்மிடிப்பூண்டி தாசில்தார் பிரீத்தி விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டார். மேலும் போலீசார் அசம்பாவிதங்களை தவிர்க்க குவிக்கப்பட்டனர். இந்நிலையில் உயிரிழந்த லாரி டிரைவர் மதன்குமாரின் உடலை சம்பவ இடத்தில் இருந்து பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல உறவினர்கள் அனுமதிக்காததால் அங்கு தொடர்ந்து பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில் உறவினர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி 4 மணி நேரத்திற்கு பின்னர் மதன் குமாரின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.